துபாய்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் முடிந்ததும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் உலகக் கிண்ண டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளன.
'சூப்பர் 12' சுற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகளுடன் இந்திய அணி இரண்டாம் பிரிவில் இடம்பெற்றுள்ளது. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெல்லும் இரு அணிகளும் அப்பிரிவில் இடம்பெறும்.
இந்திய அணி இம்மாதம் 24ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.
இந்நிலையில், அணிகள் விவரம் முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டபோதும் அதில் மாற்றம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது.
அதற்கேற்ப, இந்திய அணியில் அக்சர் பட்டேலுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷார்துல் தாக்குர் (படம்) சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர் ஆகியோருடன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார் அக்சர் பட்டேல்.
அத்துடன், அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மெரிவாலா, கரண் சர்மா, வெங்கடேஷ் ஐயர், ஷாபாஷ் அகமது, கிருஷ்ணப்ப கௌதம் ஆகிய எட்டு வீரர்களும் இந்திய அணி ஆயத்தமாக உதவுவர்.
இந்திய அணி விவரம்: விராத் கோஹ்லி (தலைவர்), ரோகித் சர்மா (துணைத் தலைவர்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பன்ட், ஹார்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாகர், அஸ்வின், ஷார்துல் தாக்குர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி.

