மான்செஸ்டர்: எதிர் அணியின் ரசிகர்கள், நடுநிலை ரசிகர்களையும்கூட தன்வசப்படுத்தும் வகையில் விளையாடிவருகிறது லிவர்பூல் காற்பந்து அணி. பரம வைரிகளான மான்செஸ்டர் யுனைட்டெட்டை அதன் அரங்கிலேயே 5-0 எனும் கோல் கணக்கில் வென்றது இதைத்தான் நிரூபிக்கிறது.
"இந்த ஆட்டத்தைப் பற்றி வருங்காலத்தில் பலர் பேசுவர், காரணம் நீண்ட காலத்திற்கு இதுபோல் ஓர் ஆட்டம் நடைபெறாது, அறவே நடைபெறாமலும் போகலாம்," என்றார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளாப். 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சென்ற ஆண்டு லிக் கிண்ணத்தை வென்ற லிவர்ப்பூல், கடந்த பருவத்தில் தடுமாறியது. இப்பருவத்தில் இதுவரை மிகச் சிறப்பாக ஆடி வந்துள்ளது. எது நடந்தாலும் சரி, யுனைடெட்டை சீர்குலைப்பதைவிட வேறு எதுவும் ஆனந்தம் தராது லிவர்ப்பூல் ரசிகர்களுக்கு. 2018ஆம் ஆண்டுவரை தள்ளாடிக்கொண்டிருந்த லிவர்பூலுக்கு இப்போது ஒளிமயமான பாதை தெரிகிறது.
யுனைடெட்டின் நிலையோ திண்டாட்டம். கிரிஸ்டியானோ ரொனால்டோ உட்பட நட்சத்திரங்களை வாங்கிய இதன் ரசிகர்கள் பலர், ஆட்டத்தின் பிற்பாதி தொடங்குவதற்கு முன்னரே ஓல்ட் ட்ராஃபர்ட் அரங்கைவிட்டு வெளியேறினர். வீட்டில் இருந்த பலரும் ஆட்டத்தை ஒரு கட்டத்திற்கு மேல் பார்ப்பதை நிறுத்தினர். நிர்வாகி ஒலே குனா சொல்ஷியா மீது உள்ள அதிருப்தி வளரவும் செய்துள்ளது. தொடர்ந்து யுனைடெட் நிர்வாகியாக இருக்குமாறு லிவர்ப்பூல் ரசிகர்கள் ஆட்டத்தின்போது சொல்ஷியாவைக் கிண்டலாகக் கேட்டுக்கொண்டனர். முன்னாள் விளையாட்டாளர்கள், காற்பந்து விமர்சகர்கள், ரசிகர்கள் எனப் பலர் யுனைடெட் நிர்வாகியாக இருக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டார் என்றும் கூறுகின்றனர்.
எனினும், அதைப் பற்றி வருத்தப்படாமல் கைவசம் உள்ள மிகப் பெரிய சவாலைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறார் சொல்ஷியா. "நானும் வெகு தூரம் வந்துவிட்டேன், குழுவாகவும் நாங்கள் வெகு தூரம் வந்துள்ளோம். விட்டுக்கொடுக்கும் நிலையை நாம் தாண்டிவிட்டோம்," எனச் சொன்ன சொல்ஷியா, "இனி அணியை மீண்டும் எழச் செய்வது கடினம்தான். விளையாட்டாளர்கள் தன்னம்பிக்கையின்றி இருக்கின்றனர், ஆனால் அதே வேளையில் மீண்டுவர வகைசெய்யும் மனப்போக்கைக் கொண்ட பல வீரர்களும் அணியில் உள்ளனர்," எனக் கூறி அணிக்கு உற்சாகம் தர முயன்றார்.
மற்றோர் ஆட்டத்தில் சென்ற வாரம் யுனைடெட்டை வென்ற லெஸ்டர் சிட்டி ப்ரென்ட்ஃபர்ட்டை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. இப்பருவத்தின் தொடக்கத்தில் தடுமாறிய லெஸ்டர் இப்போது ஆற்றலை வெளிப்படுத்தி வருகிறது.

