தடுப்பூசி போடாதோர் டென்னிஸ் பொதுவிருதில் விளையாடலாம்
மெல்பர்ன்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் போட்டியில் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விளையாட்டாளர்களால் பங்கேற்கமுடியும் என்று பெண்கள் டென்னிஸ் சங்கம் அதன் விளையாட்டாளர்களிடம் சொன்னதாக அமெரிக்க ஊடகங்களுக்குக் கசிந்த மின்னஞ்சல் தெரிவித்துள்ளது. அதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்ளாத விளையாட்டாளர்கள் 14 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டால் போதும்.
பெண்கள், ஆண்கள் இரு தரப்பினரின் டென்னிஸ் சங்கங்களைச் சேர்ந்த விளையாட்டாளர்களில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. ஆண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தை வகிக்கும் நோவாக் ஜொக்கொவிச், தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்பது குறித்து தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.
வெற்றிவாகை சூடிய புதுத் தம்பதி
பர்னோ (செக் குடியரசு): சிங்கப்பூரைச் சேர்ந்த பாட்மிண்டன் விளையாட்டாளர்களும் புதுமணத் தம்பதியுமான டெரி ஹீ, டான் வெய் ஹான் ஆகியோர் தங்களின் ஐந்தாவது அனைத்துலக விருதை வென்றுள்ளனர். செக் பொதுவிருது கலப்பு இரட்டையர் போட்டியில் இருவரும் ரஷ்யாவின் லெவ் பாரினொவ், அனஸ்டாசியா பொயாரம் ஆகியோரை 28 நிமிடங்களில் வென்றனர். ஆட்டக்கணக்கு 21-18, 21-12.இவ்வாட்டம் செக் குடியரசின் பர்னோ நகரில் நடைபெற்றது.
இவ்விரு சிங்கப்பூர் வீரர்களுக்கும் இம்மாதம் பொற்காலமாக அமைந்துள்ளது. இம்மாதம் இரண்டாம் தேதியன்று இருவரும் மணமுடித்தனர், 13ஆம் தேதியலிருந்து 17ஆம் தேதிவரை நடைபெற்ற நெதர்லாந்து பொதுவிருதுப் போட்டியில் மூன்றாவதாக வந்தனர். செக் பொருவிருதுப் போட்டியில் கண்டுள்ள வெற்றி, ஐந்தாண்டுகளில் இருவரும் இணையாக கைப்பற்றிய முதல் விருது. 2017ஆம் ஆண்டில் இருவரும் உலகத் தரவரிசையில் 15ஆம் இடத்தை வகித்தனர்.
ஹீ, 2019ஆம் ஆண்டில் தேசிய சேவை ஆற்றச் சென்றதால் இருவரும் பிரிய நேரிட்டது. நெதர்லாந்து பொதுவிருதுப் போட்டிக்கு முன்பு மீண்டும் இணைந்தனர்.
ஹேமில்டனை வெல்லவிடாமல் தடுத்த வெர்ஸ்டாப்பன்
ஆஸ்டின் (அமெரிக்கா): பந்தயம் முடியவிருந்த கடைசி தருணங்களில் லுயிஸ் ஹேமில்டன் போட்டி கொடுத்தபோதும் அமெரிக்க கிராண்ட் பிரி விருதைத் தட்டிச் சென்றார் ரெட் புல்லின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன். இப்பருவத்தில் ஃபார்முலா ஒன்று போட்டிகள் நிறைவடைய இன்னும் ஐந்து பந்தயங்கள் எஞ்சியுள்ள நிலையில் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார் வெர்ஸ்டாப்பன்.
பந்தயத்தின் தொடக்கத்தில் முன்னணியில் இருந்தார் ஹேமில்டன். அதற்குப் பின்னர் வெர்ஸ்டாப்பன் மீண்டு வந்தார். பந்தயம் முடிய இரண்டு சுற்றுகள் எஞ்சியிருந்த நிலையில் வர்ஸ்டாப்பனுக்குப் பின்னால் இருந்தபடி ஓட்டினார் மெர்சிடிஸின் ஹேமில்டன்.
140,000 ரசிகர்களுடன் நிரம்பி வழிந்த அரங்கின் முன்னிலையில் ஆஸ்டின் நகரில் நடைபெற்றது மிகவும் விறுவிறுப்பாக அமைந்த பந்தயம். அரங்கில் இருந்த ஆரவாரம், ஃபார்முலா ஒன்றுக்கு அமெரிக்காவில் இருக்கும் வரவேற்பு இதுவரை காணாத உச்சத்தைத் தொட்டிருக்கலாம் என்ற உணர்வைத் தந்ததாகச் சொல்லப்படுகிறது. இன்னும் சுமார் இரண்டு வாரங்களில் மெக்சிகோ கிராண்ட் பிரி நடைபெறவுள்ளது. அதில் பொதுவாக ரெட் புல் அணி சிறப்பாகச் செய்து வந்துள்ளது. இம்முறையும் அவ்வாறு நேர்ந்தால் ஹேமில்டனுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

