பார்சிலோனா: இந்த பருவத்தில் சிரமப்பட்டு வரும் பார்சிலோனா காற்பந்து அணிக்கு கவலை அதிகரித்து வருகிறது. ஸ்பானிய லீக் ஆட்டத்தில் ரியால் மட்ரிட்டிடம் 2-1 எனும் கோல் கணக்கில் தோல்வியடைந்த பார்சிலோனா, பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தை வகிக்கிறது. ரியால் இரண்டாம் இடத்தில் உள்ளது.
அணித் தலைவர் லயனல் மெஸ்ஸி உட்பட சில வீரர்களை விற்று புதிய விளையாட்டாளர்களை வாங்கியுள்ள பார்சிலோனாவின் ஆட்டம் ரசிகர்களை வருத்தப்படச் செய்துள்ளது.
ரியாலிடம் தோல்வியடைந்த பிறகு பார்சிலோனா நிர்வாகி ரோனல்ட் கூமனின் வாகனத்தை நகரவிடாமல் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர் சில ரசிகர்கள். அச்செயலை வன்மையாகக் கண்டித்தது பார்சிலோனாவின் நிர்வாகக் குழு. நெருக்குதல் இருந்தாலும் நிர்வாகக் குழு கூமனுக்கு ஆதரவளித்து வந்துள்ளது.
இதற்கு முன் 2003ஆம் ஆண்டிலும் இவ்வாறே பருவத்தைத் தொடங்கியது பார்சிலோனா. ஆனால் அப்பருவத்தின் பிற்பாதியில் அதன் மறுமலர்ச்சி தொடங்கியது.
அதுவரை களையிழந்திருந்த பார்சிலோனா அதற்குப் பின்னர்தான் உலகின் ஆகச் சிறந்த அணிகளில் ஒன்றாக மீண்டும் அவதரித்தது.

