ஐபிஎல் கிரிக்கெட்டில் இரு புதிய அணிகள்

துபாய்: அடுத்த ஆண்டில் இருந்து இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும்.

கடந்த ஆண்டுகளில் எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில், அகமதாபாத், லக்னோ நகரங்களை மையமாகக் கொண்ட இரு புதிய அணிகள் உருவாக்கப்படவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கான ஏலம் கேட்கும் நிகழ்ச்சி துபாயில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அணிகளுக்கான அடிப்படை விலை ரூ.2,000 கோடியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏலத்தில் ஆர்பிஎஸ்ஜி குழுமம் ரூ.7,090 கோடி கொடுத்து லக்னோ அணியையும் சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் ரூ.5,625 கோடி கொடுத்து அகமதாபாத் அணியையும் வாங்கியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்தது.

“2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும். மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும். ஒவ்வோர் அணியும் தனது சொந்த அரங்கில் ஏழு போட்டிகளிலும் எதிரணிகளின் அரங்கில் ஏழு போட்டிகளிலும் விளையாடும்,” என்று பிசிசிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சூதாட்டப் புகார் காரணமாக 2016, 2017ஆம் ஆண்டுகளில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்பட, அப்போது குஜராத் லயன்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் என்ற இரு அணிகள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டன. 

இப்போது லக்னோ அணியை வாங்கியிருக்கும் ஆர்பிஎஸ்ஜி குழுமமே அப்போது புனே அணியின் உரிமையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம், கோட்டக், டோரன்ட் ஸ்போர்ட் வென்ச்சர்ஸ், ஆல்கார்கோ லாஜிஸ்டிக்ஸ், கேப்ரி குளோபல், லான்சர் கேப்பிட்டல்-அவ்ராம் கிளேசர், இந்துஸ்தான் மீடியா வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் நேற்றைய ஏலத்தில் பங்கேற்றன.

இதற்குமுன் 2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரிலும் பத்து அணிகள் பங்கேற்றன. அவ்வாண்டில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ் இந்தியா என இரு புதிய அணிகள் சேர்க்கப்பட்டன.

ஆயினும், அவ்வாண்டுடன் கொச்சி அணியின் உரிமம் ரத்து செய்யப்பட, அதன்பின் ஈராண்டுகள் ஒன்பது அணிகள் விளையாடின.

இதனிடையே, அடுத்த ஆண்டு மார்ச்-மே மாதங்களில் 14வது முறையாக நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ‘மெகா’ ஏல நிகழ்ச்சி வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!