செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

நோய்வாய்ப்பட்ட தாயை நினைத்து பெரும் கவலையில் பாபர் ஆசம்

துபாய்: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியபோது பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் ஆசமின் நோய்வாய்ப்பட்ட தாய்க்கு 'வென்டிலேட்டர்' எனும் சுவாசக் கருவி பொருத்தப் பட்டிருந்ததாக அவரது தந்தை ஆசம் சித்திக் தெரிவித்துள்ளார். அவ்வாட்டத்திலிருந்து வெளியேறாமல் 68 ஓட்டங்களை எடுத்து அசத்தினார் பாபர்.

சென்ற வாரம் பாகிஸ்தான் இடம்பெற்ற மூன்று ஆட்டங்களிலும் மிகுந்த மனவருத்தத்துடன் பாபர் விளையாடியதாகத் திரு ஆசம் சித்திக் இன்ஸ்டகிராமில் கூறினார். பாபரின் தாய் அறுவை சிகிச்சைக்குச் சென்றிருந்தார். இப்போது அவர் குணமடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கிண்ணத்தில் முதல் மூன்று ஆட்டங்களை வென்றுள்ள பாகிஸ்தான், அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

கம்பீரமாக மீண்ட பயன் மியூனிக்

பெர்லின்: சென்ற வாரம் ஐந்து கோல் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு ஐந்து கோல்களை அடித்து வெற்றிகண்டுள்ளது பயன் மியூனிக் காற்பந்து அணி. புண்டஸ்லீகாவில் யூனியன் பெர்லினை 5-2 எனும் கோல் கணக்கில் வென்றது பயன். அணியின் நட்சத்திரம் ராபர்ட் லெவன்டொவ்ஸ்கி இரண்டு கோல்களை அடித்தார். லீரோய் சானே, கிங்ஸ்லீ கோமன், தாமஸ் முல்லர் ஆகியோர் இதர கோல்களை அடித்தனர்.

சென்ற வாரம் ஜெர்மானிய கிண்ண ஆட்டத்தில் பொருசியா முஞ்சன்கிளாட்பாக்கிடம் 5-0 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது பயன். 43 ஆண்டுகளில் இவ்வணி சந்தித்த ஆக மோசமான தோல்வி அது.

தற்போது புண்டஸ்லீகா பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது தொடர்ந்து ஒன்பது பருவங்களாக லீக் கிண்ணத்தை வென்றுள்ள பயன். ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது பொருசியா டார்ட்மண்ட். கொலோன் அணியை 2-0 எனும் கோல் கணக்கில் டார்ட்மண்ட் வென்றது.

42 வயது டெக்செய்ரா வென்ற விருது

அபு தாபி: போலந்தின் ஜேன் பிளாச்சோவிட்சை வென்று 'மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ்' எனப்படும் கலப்பு தற்காப்புக் கலை விருதை 42 வயதில் வென்றுள்ளார் பிரேசிலின் கிளோவர் டெக்செய்ரா. 'யூஎஃப்சி' போட்டியின் 'லைட் ஹெவிவெயிட்' பிரிவில் அவர் விருதைத் தட்டிச் சென்றார்.

மல்யுத்த உத்திகளைக் கொண்டு முதல் சுற்றை வென்றார் டெக்செய்ரா. இரண்டாம் சுற்றில் இரு வீரர்களும் ஒருவரையொருவர் பலமாகக் குத்திக்கொண்டனர். இரண்டாம் சுற்றில் மூன்று நிமிடம் இரண்டு விநாடிகள் ஆனபோது பிளாச்சோவிட்சை அபாரமாக அடக்கி வெற்றிகண்டார் டெக்செய்ரா.

42 வயதில் இத்தகைய சாதனைகளைப் புரிய முடியாது எனப் பலரிடையே இருக்கக்கூடிய கருத்தைத் தான் பொய்யாக்கிவிட்டதாகவும் தொடர்ந்து அவ்வாறே செய்யப்போவதாகவும் விருதை வென்ற பிறகு அளித்த பேட்டியில் அவர் கூறினார். 'யூஎஃப்சி' விருதை வென்றோரில் ராண்டி கூட்சருக்கு மட்டுமே டெக்செய்ராவைவிட அதிக வாயதாகியிருந்தது. திரைப்பட நடிகருமான கூட்சர், தனது 45வது வயதில் 'யூஎஃப்சி' விருதை வென்றார்.