நியூகாசல்: இங்கிலீஷ் பிரிமியர் லீக்கில் இரண்டு ஆட்டங்களில் 10 கோல்களை அடித்திருக்கிறது பட்டியலில் முதலிடம் வகிக்கும் செல்சி காற்பந்து அணி. சென்ற வாரம் 7-0 எனும் கோல் கணக்கில் நோரிச் சிட்டியை வதம் செய்த செல்சி, நேற்று முன்தினம் நியூகாசல் யுனைடெட்டை 3-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது.
அபாரத்தின் உச்சியை செல்சி தொடக்கூடும் என்ற உணர்வு எழுந்துள்ளது. இவ்வாறே தொடர்ந்து ஆடினால் இவ்வணியை இறக்குவது சிரமம் என்ற அச்சம் மற்ற அணிகளுக்கு வரலாம்.
அதே வேளையில் நடப்பு வெற்றியாளர் அணியான மான்செஸ்டர் சிட்டி, எதிர்பாராவிதமாக கிரிஸ்டல் பேலஸிடம் 2-0 எனும் கோல் கணக்கில் தோல்வியுற்றது.
சென்ற பருவத்தில் மிகச் சிறப்பாக ஆடிய சிட்டியிடம் தற்போது அந்த உத்வேகம் குறைந்து காணப்படுகிறது. தரமான முன்னிலை ஆட்டக்காரர் இல்லாமல் சிரமப்படும் சிட்டிக்குப் புத்துயிர் ஊட்டும் புதிய விளையாட்டாளர்கள் தேவைப்படலாம்.
வரும் சனிக்கிழமையன்று பரம வைரியான மான்செஸ்டர் யுனைடெட்டைச் சந்திக்கவுள்ளது சிட்டி.