பார்சிலோனா: ஆட்டத்தின்போது இதயத்தில் வலி ஏற்பட்டதால் பிரபல காற்பந்து வீரர் சர்ஜியோ அகுவேரோ பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அலாவெஸ் அணிக்கு எதிரான ஸ்பானிய லீக் ஆட்டத்தில் முன்னாள் மான்செஸ்டர் சிட்டி வீரரான அகுவேரோவிற்கு இதயத்தில் வலி ஏற்பட்டது. திடலில் அவருக்கு சில நிமிடங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் அகுவேரோவிற்குப் பதிலாக ஃபிலீப் குட்டின்யோ கொண்டுவரப்பட்டார். திடலிலிருந்து நடந்தபடிதான் அகுவேரோ வெளியேறினார்.
இதய வலிக்கான காரணத்தை அறிய மருத்துவமனையில் அகுவேரோவிற்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 33 வயதான அகுவேரோ, உலகின் ஆகச் சிறந்த முன்னிலை ஆட்டக்காரர்களில் ஒருவர். ஆனால் கடந்த சுமார் ஈராண்டுகளாக அவர் அதிகம் விளையாடவில்லை, அடிக்கடி காயமடையவும் செய்கிறார்.
சென்ற வாரம் பயிற்றுவிப்பாளர் ரோனல்ட் கூமனைப் பணிநீக்கம் செய்த பார்சிலோனா அலாவெஸுடன் 1-1 எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது. பார்சிலோனாவின் கோலை அடித்தவர் மெம்ஃபிஸ் டிப்பாய். லீக் பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ளது பெரிய அளவில் சிரமப்பட்டு வரும் பார்சிலோனா. இவ்வணி நிதி நெருக்கடியாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

