துபாய்: ஆண்களுக்கான 20 ஓவர்களில் ஆடப்படும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வென்றது இங்கிலாந்து. 71 ஓட்டங்களை எடுத்து அசத்தினார் ஆட்டத்திலிருந்து வெளியேறாத இங்கிலாந்து வீரர் ஜொஸ் பட்லர். இத்தனை ஓட்டங்களை எடுக்க அவருக்குத் தேவைப்பட்டது 32 பந்துகள் மட்டுமே.
ஆட்டத்தை வெல்வதற்கான இலக்கு 126 ஓட்டங்கள். 8.2 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் இலக்கைத் தொட்டது இங்கிலாந்து. இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியடையாத ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடியது.
ஆட்டம் முடிய எஞ்சியிருந்த பந்துகளைக் கருத்தில் கொள்ளும்போது, டி20 ஆட்டங்களில் இதுவே ஆஸ்திரேலியாவின் ஆக மோசமான தோல்வி. போட்டியில் தான் இதுவரை ஆடிய மூன்று ஆட்டங்களையும் இங்கிலாந்து வென்றுள்ளது. அடுத்ததாக இலங்கையுடன் மோதுகிறது. அதற்குப் பிறகு பிரிவின் கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் மோதும்.
நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது தென்னாப்பிரிக்கா. விறுவிறுப்பான இவ்வாட்டத்தை வெல்வதற்கான இலக்கு 143 ஓட்டங்கள். வெற்றிபெற கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன. 19.5 ஓவர்களுக்குள் 146 ஓட்டங்களை எடுத்து வெளுத்துக்கட்டியது தென்னாப்பிரிக்கா. முதல் மூன்று ஆட்டங்களில் இரண்டில் தோல்வியடைந்துள்ளது இலங்கை.