ரோம்: இத்தாலியில் நடைபெற்ற 15 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஒற்றையர் மேசைப் பந்துப் போட்டியை சிங்கப்பூரின் செர் லின் சியேன் வென்றுள்ளார். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தை வகிக்கும் லின் சியேன், இறுதியாட்டத்தில் அயர்லாந்தின் சோஃபி எர்லியை 3-2(5-11, 11-5, 11-8, 10-12, 11-7) எனும் ஆட்டக்கணக்கில் வென்றார்.
போட்டியில் இதற்கு முன்னதாக ஆடிய ஐந்து ஆட்டங்களிலும் லின் சியேன் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் வென்றார். 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் அதில் குரோவேஷியாவின் டோரா கொசிச்சிடம் 3-0 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியுற்றார் லின் சியேன். அந்தப் போட்டியில் மற்றொரு சிங்கப்பூரரான சுவோ ஜிங்யி அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார். அதில் இத்தாலியின் நிக்கோல் அர்லியாவிடம் 3-1 எனும் ஆட்டக்கணக்கில் தோல்வியடைந்தார்.
15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் வெற்றிவாகை சூடினார் சிங்கப்பூரின் ஐசேக் குவெக். இறுதியாட்டத்தில் நைஜீரியாவின் உஸ்மான் இஷோலா ஒக்கான்லாவோனை 3-1(11-5, 13-15, 11-3, 11-3) எனும் ஆட்டக்கணக்கில் வென்றார்.