டி20 உலகக் கிண்ணம்: அணியில் மாற்றம் செய்தும் ரசிகர்களை ஏமாற்றிய இந்தியா
துபாய்: உலகக் கிண்ணப் போட்டிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிரான இந்திய அணியின் சோகம் தொடர்கிறது.
கடந்த 18 ஆண்டுகளாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் நடத்திய போட்டிகளில் அவ்வணியை இந்தியா வீழ்த்தியதே இல்லை.
இதனால், நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் அவ்வரலாறு மாறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இம்முறையும் இந்தியா படுமோசமாகத் தோற்றுப்போனது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வி கண்டதை அடுத்து, அணியில் இரு மாற்றங்களைச் செய்தபோதும் அவை இந்திய அணிக்கு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
சூர்யகுமார் யாதவும் புவனேஸ்வர் குமாரும் நீக்கப்பட்டு, இஷான் கிஷனும் ஷார்துல் தாக்குரும் சேர்க்கப்பட்டனர். அதனுடன், ரோகித் சர்மாவிற்குப் பதிலாக ராகுலுடன் தொடக்க வீரராகவும் களமிறக்கப்பட்டார் இஷான். ஆனாலும், பயன் இல்லை.
அணித்தலைவர் விராத் கோஹ்லி உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் நியூசிலாந்து வீரர்களின், குறிப்பாக மிச்செல் சான்ட்னர், இந்தர்பீர் சிங் சோதி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்டு, ஓட்டமெடுக்கத் திணறினர்.
இறுதியில், 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களையே இந்திய அணியால் எடுக்க முடிந்தது.
14.3 ஓவர்களிலேயே இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, இந்த எளிய இலக்கை எட்டி வெற்றியைச் சுவைத்தது நியூசிலாந்து.
போட்டிக்குப் பின் பேசிய கோஹ்லி, "பந்தடிப்பிலும் பந்துவீச்சிலும் நாங்கள் காட்டிய துணிச்சல் போதாது. ஆட்டத்தின் முதல் பந்திலிருந்தே நியூசிலாந்து எங்களை நெருக்கடியில் ஆழ்த்திவிட்டது," என்றார்.
மாறாக, எல்லாத் துறைகளிலும் தமது அணியின் செயல்பாடு குறித்துப் பெருமிதம் கொண்டார் நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன்.
இதனால், ஏதேனும் அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஓமான் நாடுகளில் நடந்து வரும் உலகக் கிண்ண டி20 போட்டிகளில் 'சூப்பர் 12' சுற்றுடன் இந்திய அணி வெளியேறுவதைத் தடுக்க முடியாது.