சிங்கப்பூர் தேசிய காற்பந்து அணித்தலைவர் ஹாரிஸ் ஹருணுக்கு (படம்) கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியான் காற்பந்துக் கூட்டமைப்பின் சுசுகி கிண்ணப் போட்டிகள் அடுத்த மாதம் 5ஆம் தேதி சிங்கப்பூரில் தொடங்க உள்ளன.
அதற்கு ஆயத்தமாகும் வகையில், இன்று தொடங்கவிருக்கும் பத்து நாள் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் அணியினர் நேற்று துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், 30 வயதான ஹாரிஸ் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் நேற்று அறிவித்தது.
கடந்த வாரம் எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின்போது அவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சென்ற மாதம் 25ஆம் தேதியில் இருந்து அணியின் சக வீரர்களுடன் ஹாரிஸ் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதனால், மற்ற வீரர்களும் அணியின் ஊழியர்களும் 'ஏஆர்டி' விரைவுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் எவரையும் கிருமி தொற்றவில்லை என்று முடிவுகள் வந்தன.
துபாயில் நாளை கிர்கிஸ்தான் அணியுடன் அதிகாரபூர்வ 'ஏ' நிலை ஆட்டத்திலும் இம்மாதம் 16ஆம் தேதி மொரோக்கோ 'ஏ' அணியுடன் அதிகாரபூர்வமற்ற நட்புமுறை ஆட்டத்திலும் சிங்கப்பூர் அணி விளையாட இருக்கிறது.
சிங்கப்பூர் நான்கு முறை சுசுகி கிண்ணத்தை வென்றுள்ளது.