தமிழகத்தில் உள்ள பல் மருத்துவமனை ஒன்று, தங்களது மருத்துவமனையை நாடி பல் சிகிச்சை பெற வரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, 5,000 புத்தகங்களுடன் ஒரு நூலகத்தையும் அமைத்துள்ளது.
இதனால், நாகர்கோவிலில் உள்ள ஜாப்ரோ பல் மருத்துவமனைக்கு பல்நோயாளிகள் மட்டுமல்லாது, புத்தக வாசிப்பாளர்களும் ஏராளமானோர் படைஎடுத்து வருகின்றனர்.
இம்மருத்துவமனை வளாகத்தில் 5,000க்கும் அதிகமான புத்தகங்களோடு தரமான நூலகமும் அமைத்துள்ளார் மருத்துவர் பெரில்.
"என் அம்மா லாரன்ஸ் மேரி ஓய்வுபெற்ற நூலகர். பள்ளிக்கால விடுமுறை நாட்களில் புத்தகங்களை வாசித்துதான் எங்களது பொழுது நகரும். பல நேரங்களில் புத்தகங்களே எங்கள் நண்பர்களாகவும் தோழிகளாகவும் இருந்துள்ளன. அதனால், வீட்டிலேயே ஆயிரக்கணக்கான புத்தகங்களை வைத்திருந்ேதாம்.
"இப்படி புத்தகங்களை வீட்டிலேயே வைத்திருப்பதைவிட பல் மருத்துவமனைக்குள் நூலகம் அமைத்தால், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.
"இம்மருத்துவமனையைக் கட்டும்போதே நூலகத்துக்கும் இடம் ஒதுக்கிவிட்டோம்," என்கிறார் பெரில்.
மருத்துவமனையில் ஒரு நோயாளிக்குச் சிகிச்சை வழங்கிக்கொண்டிருக்கும்போது, பிற நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்கும் சூழல் இருக்கும். கைபேசிக்குள் சங்கமிக்கவும் தொலைக்காட்சியைப் பார்க்கவும் அவரவர் இல்லங்களிலேயே வாய்ப்பு உள்ளதால், அவர்களது நேரத்தை அர்த்தமுள்ளதாக்கும் முயற்சி இது. உடலுக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்தாலும் நோயாளியின் மனதுக்குப் புத்தகங்கள்தான் பெருமருந்து என்று சொல்லும் மருத்துவர் பெரிலின் முயற்சி பாராட்டுக்குரியது.