துபாய்: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்தது.
நேற்று 11ஆம் தேதி வியாழக்கிழமை இரவு நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அவ்வணி, ஆஸ்திரேலியாவிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.
முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 176 ஓட்டங்களைக் குவித்தது.
அவ்வணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் முகம்மது ரிஸ்வான் 67 ஓட்டங்களை விளாசினார்.
இந்நிலையில், ரிஸ்வான் குறித்த பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் பாகிஸ்தான் அணியின் மருத்துவர் நஜீப் சோம்ரூ.
“நெஞ்சில் ஏற்பட்ட கடுமையான தொற்றுக்காக ரிஸ்வான் கடந்த 9ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் இரண்டு இரவுகளைக் கழித்தார்.
“அவர் உடல்நிலை தேறிய வேகம் நம்ப முடியாத விதத்தில் இருந்தது. ஆட்டம் தொடங்குமுன் அவர் தமது உடற்தகுதியை மெய்ப்பித்தார்.
“நாட்டிற்காகத் திறம்பட செயலாற்ற வேண்டும் என்ற மனவுறுதியுடன் அவர் இருந்தார். அதே உறுதியுடன், திடலில் அவரது அதிரடி ஆட்டத்தையும் நாம் இன்று (நேற்று) கண்டோம்,” என்றார் டாக்டர் சோம்ரூ.
இத்தகவல் வெளியானதை அடுத்து, ரிஸ்வானின் நாட்டுப்பற்றையும் மனவுறுதியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடப்பு உலகக் கிண்ணத் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று அரைசதங்களுடன் 281 ஓட்டங்களைக் குவித்துள்ளார் ரிஸ்வான்.