பாரிஸ்: கிரிஸ்டியானோ ரொனால்டோ, லயனல் மெஸ்ஸி ஆகியோருக்கு வயதாகிவரும் நிலையில், காற்பந்து உலகைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அடுத்த நட்சத்திரம் தானே என்பதை உரக்கச் சொல்கிறார் பிரான்சின் கிலியோன் இம்பாப்பே. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் கசக்ஸ்தானை 8-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியது பிரான்ஸ். எட்டில் நான்கு கோல்களை அடித்தார் இம்பாப்பே.
இவ்வெற்றியின் மூலம் அடுத்த உலகக் கிண்ணப் போட்டிக்கு பிரான்ஸ் தகுதிபெறுவது உறுதியாகிவிட்டது. டி பிரிவில் ஓர் ஆட்டம் எஞ்சியுள்ளபோதிலும் முதலிடத்தை பிரான்சிடமிருந்து பறிக்க இதர அணிகளுக்குப் போதுமான புள்ளிகள் இல்லை.
பிரான்சின் இதர கோல்களை அடித்தவர்கள் கரிம் பென்சேமா, ஏட்ரியன் ரபியோ, அன்டுவான் கிரீஸ்மன். பென்சேமா இரண்டு கோல்களை அடித்தார்.
சென்ற உலகக் கிண்ணத்தை வென்றது பிரான்ஸ். அப்போட்டியில் இவ்வணிக்குப் பெரிதும் உதவியது இம்பாப்பேயின் விளையாட்டு. அண்மையில் அவ்வப்போது சில தடுமாற்றங்களைச் சந்தித்தபோதும் இம்பாப்பேயின் ஆற்றல் யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.
"உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள எண்ணினோம். சென்ற போட்டியில் இடம்பெற்று கிண்ணத்தை வென்றவர்களுக்கும், உலகக் கிண்ணத்தில் விளையாடுவது என்பது ஆக உயரிய கனவு," என்ற பிஎஸ்ஜி நட்சத்திரமான இம்பாப்பே. "ரசிகர்கள் ஆட்டத்தை ரசித்தனர், நாங்களும் ரசித்தோம். நாங்கள் ஆட்டத்தையும் எதிர் அணியையும் மதித்தோம். கடைசிவரை சிறப்பாக ஆட எண்ணினோம்," எனக் குறிப்பிட்டார்.
உலகக் கிண்ணத்தை இரண்டு முறை வென்றுள்ளது பிரான்ஸ். 1998ஆம் ஆண்டில் சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை வென்றது. அதற்குப் பிறகு நடைபெற்ற ஒவ்வோர் உலகக் கிண்ணப் போட்டிக்கும் தவறாமல் தகுதிபெற்றிருக்கிறது. 1998ஆம் ஆண்டுக்கு முன் ஆறு முறை போட்டிக்குத் தகுதிபெறாமல் இருந்தது.
டி பிரிவில் தற்போது இரண்டாம் இடத்தை வகிக்கும் பின்லாந்துக்கு 'பிளேஆஃப்' தகுதிச் சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அச்சுற்றை வென்றால் தனது வரலாற்றில் முதன்முறையாக உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறும் பின்லாந்து.
சென்ற போட்டியின் இறுதியாட்டத்தில் பிரான்சிடம் தோல்வியுற்றாலும் பல ரசிகர்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்த குரோவேஷியா, ஆகக் கடைசி நிலவரப்படி ஹெச் பிரிவில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

