செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மீண்டும் நேரடிப் பங்கேற்பாளர்களுடன் நெடுந்தொலைவு ஓட்டம்

சிங்கப்பூர்: அதிகப் பரபரப்பு இல்லாதிருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூரில் நேரடிப் பங்கேற்பாளர்களுடன் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயம் நடைபெற்றுள்ளது. கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் நடத்திய 'ஹாஃப்-மாரத்தோன்' எனப்படும் 21 கிலோமீட்டர் நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயத்தில் சிங்கப்பூரின் ஆகச் சிறந்த 15 ஓட்டப் பந்தய வீராங்கனைகள் பங்கேற்றனர். ஈராண்டுகளில் முதன்முறையாக நேரடிப் பங்கேற்பாளர்களுடன் நடைபெற்ற இப்பந்தயத்தில் வெற்றிவாகை சூடினார் முன்னாள் தென்கிழக்காசிய விளையாட்டுகள் வீராங்கனை ரேச்சல் சீ. இரண்டாம் இடத்தில் வந்தார் ஹு சியூயிங், மூன்றாம் இடத்தைப் பிடித்தார் வனேசா சோங்.

சக்காரியை வென்ற படோசா

குவாடலாஜாரா (மெக்சிகோ): 'டபிள்யூடிஏ' எனப்படும் பெண்கள் டென்னிஸ் சங்கத்தின் பிஎன்பி பரிபா பொதுவிருதுப் போட்டி ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் கிரீஸின் ரியா சக்காரியை 7-6 (7/4), 6-4 எனும் ஆட்டக்கணக்கில் வென்றுள்ளார் ஸ்பெயினின் பாவ்லா படோசா. ஏற்கெனவே அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் சென்ற மாதம் நடைபெற்ற பிஎன்பி பரிபா பெண்கள் ஒற்றையர் பொதுவிருதை வென்ற படோசா, தொடர்ந்து அபாரமாக ஆடிவருகிறார்.

சீனாவின் ஷென்சன் நகரில் நடைபெறவிருந்த இப்போட்டி மெக்சிகோவின் குவாடலாஜாராவிற்கு இடம் மாற்றப்பட்டது. தற்போதைய டென்னிஸ் பருவத்தில் உலகத் தரவரிசையில் 70வது இடத்திலிருந்து முதல் 10 இடங்களுக்கு முன்னேறிவிட்டார் படோசா.

ரொனால்டோவின் 11 வயது ரசிகைக்கு தண்டனை இல்லை

டப்ளின்: கிரிஸ்டியானோ ரொனால்டோவைக் காண அனுமதியின்றி காற்பந்துத் திடலுக்குள் வந்த 11 வயது ரசிகைக்கு வழங்கப்பட்ட தண்டனை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எடிசன் வீலன் என்ற அப்பெண்ணுக்கு முதலில் அயர்லாந்து குடியரசின் காற்பந்துச் சங்கம் 3,000 யூரோ அபராதம் விதித்தது. அதற்குப் பிறகு அத்தண்டனை அகற்றப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை பின்னிரவில் ரொனால்டோவின் போர்ச்சுகலுக்கும் அயர்லாந்து குடியரசுக்கும் இடைேய நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டித் தகுதியாட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.