கார்டிஃப்: சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துலகக் காற்பந்துப் போட்டிக்கு வேல்ஸ் தகுதிபெறாது என்பது உறுதி என்ற கருத்து பலரிடையே இருந்தது. இப்போதோ இவ்வணி கடந்த இரண்டு யூரோ போட்டிகளுக்குத் தகுதிபெற்றதோடு அவற்றில் ஒன்றில் அரையிறுதிச் சுற்றுவரை முன்னேறவும் செய்துள்ளது. 1958ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பும் வேல்ஸுக்கு உள்ளது.
இ பிரிவில் இரண்டாம் இடத்தில் முடிப்பது உறுதியான வேல்ஸ், பெலாரஸை 5-1 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காட வைத்தது. பிரிவில் இரண்டாம் இடம் உறுதியானதால் 'பிளேஆஃப்' தகுதிச் சுற்றுக்கு இவ்வணி செல்லும். அதை வென்றால் 64 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் இடம்பெறும். கேரத் பேல் போன்ற ஓருசிலரைத் தவிர சுமாரான விளையாட்டாளர்களையே கொண்ட வேல்ஸின் குழு உணர்வுதான் அதன் பலம்.