பொட்கொரிக்கா (மொன்டனெக்ரோ): கவனக்குறைவு கூடாது என்பதை நெதர்லாந்து காற்பந்து அணிக்கு நினைவூட்டியது மொன்டனெக்ரோ அணி. மொன்டனெக்ரோவிற்கு எதிரான உலகக் கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது நெதர்லாந்து. ஆட்டத்தின் கடைசி எட்டு நிமிடங்களுக்குள் இரண்டு கோல்களை அடித்து கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது மொன்டனெக்ரோ.
இவ்வாட்டத்தை வென்றிருந்தால் நெதர்லாந்து அடுத்த ஆண்டு அரங்கேறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெறுவது உறுதியாகியிருக்கும். ஆனால் இப்போது ஜி பிரிவில் நார்வேக்கு எதிரான தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியைத் தவிர்ப்பதே நல்லது என்ற நிலை இவ்வணிக்கு உருவாகியுள்ளது. ஜி பிரிவில் இரண்டே புள்ளிகள் வித்தியாசத்தில் நெதர்லாந்துக்குப் பின்னால் உள்ளன நார்வே, துருக்கி.
உலகின் தலைசிறந்த தேசியக் காற்பந்து அணிகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும் ரசிகர்களுக்குப் பலமுறை ஏமாற்றத்தையே தந்துள்ளது நெதர்லாந்து. உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு மூன்று முறை சென்றுள்ள இவ்வணி, கிண்ணத்தை வென்றதில்லை, பலமுறை போட்டிக்குத் தகுதிபெறாமலும் இருந்திருக்கிறது. இறுதியில் கோட்டை விடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது நெதர்லாந்து.