செவில்: சுவீடனுக்கு எதிரான
ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் வெற்றி கோலைப் போட்ட
ஸ்பெயின், உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய அல்வாரோ மொராட்டா 86வது நிமிடத்தில் போட்ட வெற்றி கோல் உலகமெங்கும் உள்ள ஸ்பெயின் ரசிகர்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத மகிழ்ச்சியில் மூழ்கவைத்துள்ளது.
டேனி ஓல்சன் அனுப்பிய
மின்னல் வேகப் பந்து கோல் கம்பம் மீது பட்டு மொராட்டாவிடம் செல்ல, சுவீடனின் தற்காப்பு
ஆட்டக்காரர்கள் சுதாரித்துக்கொள்வதற்குள் பந்தை வலைக்குள் சேர்த்தார் மொராட்டா.
2010ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் ஸ்பெயின் கிண்ணத்தை ஏந்தியது.
அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டும் என்று தகுதிச் சுற்றில் முனைப்புடன் விளையாடிய
ஸ்பெயின், 'பி' பிரிவில் 19 புள்ளி களுடன் முதலிடம் பிடித்துள்ளது.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள சுவீடனைவிட அது நான்கு புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளது.
அடுத்த மார்ச் மாதத்தில் நடைபெறும் பிளே-ஆஃப் சுற்றில்
சுவீடன் வெற்றி பெற்றால் அது
உலகக் கிண்ண காற்பந்துப்
போட்டிக்குத் தகுதி பெறும்.
ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியும் தோல்வியைத் தழுவிய சுவீடனின் முழுக்கவனம் இனி பிளே ஆஃப் சுற்றில் இருக்கும்.
மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஆர்மினியாவை 4-1 எனும் கோல் கணக்கில் ஜெர்மனி
பந்தாடியது.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்ட ஜெர்மனியின் கோல் பசி அடங்கியதாகத் தெரியவில்லை. ஜெர்மனிக்காக இல்கே குண்டோகன் இரண்டு கோல்
களைப் போட்டார்.
2018ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் ஜெர்மனி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டியில் மீண்டும் முத்திரை பதிக்க அது ஆவலுடன் உள்ளது.