ரோட்டர்டாம்: காற்பந்து உலகில் நெதர்லாந்து என்று சொன்னாலே, பல நட்சத்திர ஆட்டக்காரர்களைக் கொண்ட வலிமைமிக்க குழு என்று பொருள்படும்.
ஆனால் அண்மையில், இருக்கும் இடம் தெரியாமல் அக்குழு தவித்து வந்தது. 2018ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு அது தகுதி பெறாதது காற்பந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுது.
இனி அவ்வளவுதான், காற்பந்து உலகில் நெதர்லாந்து மீண்டும் தலைதூக்க முடியாது என்று
விமர்சிக்கப்பட்டது.
அதுமட்டுல்லாது, நெதர்லாந்தின் பயிற்றுவிப்பாளர் லுயி வேன் ஹால்லுக்கு அண்மையில் இடுப்பில் காயம் ஏற்பட்டிருந்தது.
இந்தச் சோதனைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அடுத்த ஆண்டு கத்தாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு நெதர்லாந்து தகுதி பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் நார்வேயை அது 2-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி இலக்கை அடைந்தது.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற ஆட்டத்தில் சமநிலை பெற்றாலே போதும் என்ற நிலை இருந்தும் நெதர்லாந்து மெத்தனமாக இருந்து விடவில்லை. வெற்றிக்குக் குறிவைத்து களமிறங்கிய நெதர்லாந்தின் மிரட்டல்களுக்கு நார்வே
அஞ்சியதாகவும் தெரியவில்லை.
கோல் போட நெதர்லாந்து
எவ்வளவு முயன்றும் நார்வேயின் தற்காப்பு அரண் விட்டுக்கொடுக்காமல் பிடிவாதமாக நின்றது.
இருப்பினும், மனந்தளராது தாக்குதலில் தீவிரம் காட்டிய
நெதர்லாந்து, ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் இரண்டு கோல்
களைப் போட்டு உலகக் கிண்ணப் போட்டியில் தனக்கென ஓர் இடத்தை உறுதி செய்துகொண்டது.
நெதர்லாந்துக்காக ஸ்டீவன் பெரவேனும் மெம்ஃபிஸ் டிபாயும் கோல்களைப் போட்டனர்.
நெதர்லாந்தில் கொவிட்-19
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஆட்டத்தை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
"காயமுற்ற எங்கள் பயிற்றுவிப்பாளர் தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது, விளையாட்டரங்கத்துக்கு எங்களது ரசிகர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், இந்தச் சவால்களை முறி
யடித்து நாங்கள் வாகை சூடியுள்ளோம். அதுதான் மிகவும் முக்கியம்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் களமிறங்க நாங்கள் கத்தாருக்குச் செல்கிறோம். உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியில் விளையாட ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறோம்," என்று நெதர்லாந்து அணித் தலைவர் வெர்ஜில் வேன் டய்க் பெருமிதத்துடன் கூறினார். மற்றொரு தகுதிச் சுற்று ஆட்டத்தில் மோன்டிநெக்ரோவை 2-1 எனும் கோல் கணக்கில் தோற்
கடித்த துருக்கி, பிளே-ஆஃப் ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
"பிளே ஆஃப் சுற்றில் பலம் பொருந்திய குழுக்கள் உள்ளன. இருப்பினும், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறுவதே எங்கள் இலக்கு. எங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்க்க நாங்கள் கடுமையாகப் போராடுவோம்," என்று இலட்சிய வேட்கையுடன் கூறினார் துருக்கியின் அப்துல் காதர் உமர்.
துருக்கியைப் போலவே உக்ரேனும் பிளே ஆஃப் ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது. போஸ்னியாவை 2-0 எனும் கோல் கணக்கில் அது வீழ்த்தியது.

