பியூனோஸ் ஐரிஸ்: கத்தாருக்குப் பயணம் மேற்கொள்ள அர்ஜெண்டினா தயாராகிவிட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் பிரேசிலுடன் அது மோதியது.
ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிய, உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு அர்ஜெண் டினா தகுதி பெற்றது.
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்கு பிரேசில் ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரு குழுக்களிடையே ஆண்டாண்டு காலமாக இருந்துவரும் போட்டித்தன்மையை இந்த ஆட்டத்தில் மிகத் தெளிவாகக் காண முடிந்தது.
இருதரப்பினரும் மூர்க்கத்தனமாக விளையாடினர். காரசாரமாக நடைபெற்ற ஆட்டத்தில் கை
கலப்பு ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் நிலவியது.
பல நேரங்களில் ஆட்டக்காரர்கள் தரையில் கிடந்து வலியால் துடிப்பதும் எதிரணி தப்பாட்டத்தில் ஈடுபடுவதாக நடுவரிடம் ஆட்டக்காரர்கள் முறையிடுவதும் வழக்கமான காட்சிகளாக இருந்தன.
இருப்பினும், கவனம் சிதறாமல் விளையாடிய அர்ஜெண்டினா
உலகக் கிண்ண காற்பந்துப் போட்டிக்குத் தேவைப்பட்ட அந்த ஒற்றை புள்ளியைப் பெற்றது.
இந்நிலையில், முற்பாதியில் பிரேசிலின் ரஃபின்யாவை அர்ஜெண்டினாவின் தற்காப்பு ஆட்டக்காரர் நிக்கலஸ் ஒட்டாமெண்டி தமது முழங்கையைப் பயன்படுத்தி தாக்கியதாகவும் அவருக்குச் சிவப்பு அட்டையைக் காட்டி ஆட்டத்திலிருந்து வெளியேற்ற நடுவர் தவறிவிட்டதாகவும் பிரேசில் குழுவின் பயிற்றுவிப்பாளர் டிட்டே அதிருப்தி தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக பிரேசிலின் நெய்மார் களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.