லாஸ் ஏஞ்சலிஸ்: சீனாவின் முன்னாள் துணைப் பிரதமர் சாங் காவ்லி தம்மை வற்புறுத்தி பாலியல் உறவுகொள்ள வைத்ததாக அந்நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை பெங் ஷுவாய் சமூக ஊடகத்தில் பதிவிட்டதை அடுத்து மாயமானார். அவரது இருப்பிடம் குறித்து எவ்வித தகவலும் இல்லை. அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பெங் ஷுவாயின் பதிவு சமூக வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று பெங்கிடமிருந்து வந்ததாகக் கூறப்படும் மின்னஞ்சல் ஒன்று WTA டென்னிஸ் போட்டித் தலைவருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையானவை அல்ல என்றும் தாம் நலமாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இதை ஏற்க பலர் மறுத்துவிட்டனர். அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரினா வில்லியம்ஸ் பெங் குறித்து கவலை தெரிவித்தார்.
"சக டென்னிஸ் வீராங்கனை பெங்கிற்கு ஏற்பட்ட நிலை பற்றி கேள்விப்பட்டேன். அதிர்ச்சியில் உறைந்துள்ளேன். மனம் சுக்குநூறாக உடைந்துவிட்டது. அவர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அவரை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும். அவருக்கு நடந்த இந்தக் கொடுமையைச் சகித்துக்கொண்டு நாம் அமைதியாக இருந்துவிடக்கூடாது. இந்தச் சவால்மிக்க நேரத்தில் அவரது குடும்பத்துக்கு எனது ஆதரவையும் அன்பையும் வெளிப்படுத்துகிறேன்," என்று டுவிட்டரில் அவர் பதிவிட்டார்.
தமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் உண்மையில் பெங்கிடமிருந்தது வந்ததுதானா என்ற சந்தேகம் இருப்பதாக WTA போட்டித் தலைவர் ஸ்டீவ் சைமன் தெரிவித்தார். பெங்குடன் தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை என்றார் அவர்.

