மான்செஸ்டர்: வாட்ஃபர்ட் குழுவிற்கு எதிரான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் தோற்றதை அடுத்து, மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகிப் பதவியில் இருந்து ஒலே குனார் சோல்சியார் (படம்) நீக்கப்பட்டார்.
கடைசியாக ஆடிய ஏழு லீக் ஆட்டங்களில் மேன்யூ ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் அக்குழு பட்டியலின் ஏழாம் நிலைக்கு இறங்கியது. 29 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் செல்சியைவிட அக்குழு 12 புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.
இதனையடுத்து, முதல்நிலைக் குழுவின் பயிற்றுவிப்பாளரான மைக்கல் கேரிக், குழுவின் தற்காலிக நிர்வாகியாகச் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடினமான முடிவை எடுத்திருப்பதாக மேன்யூ நிர்வாகம் குறிப்பிட்டது. "கடந்த சில வாரங்கள் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தாலும், நீண்டகால வெற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு, குழுவை மீண்டும் கட்டியெழுப்ப கடந்த மூன்று ஆண்டுகளாக சோல்சியார் ஆற்றிய பணிகளை அது மறைக்க முடியாது. ஆட்டக்காரராகவும் நிர்வாகியாகவும் மேன்யூ வரலாற்றில் அவருக்கு நிரந்தர இடமுண்டு," என்று தெரிவிக்கப்பட்டது. மேன்யூ நிர்வாகிப் பதவியில் இருந்து ஜோசே மொரின்யோ நீக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2018 டிசம்பரில் குழுவின் இடைக்கால நிர்வாகியாக நியமிக்கப்பட்டார் 48 வயதான சோல்சியார்.அதன்பின் 2019 மார்ச்சில் மூன்றாண்டு ஒப்பந்தத்துடன் நிரந்தர நிர்வாகியாக அறிவிக்கப்பட்ட இவர், இவ்வாண்டு ஜூலையில் 2024வரை அப்பதவியில் தொடர உடன்பாடு செய்துகொண்டார்.
யாரும் எதிர்பாராத வகையில், நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த ஆகஸ்ட்டில் மீண்டும் மேன்யூவிற்குத் திரும்பினார்.
ஜேடன் சாஞ்சோ, ரஃபாயல் வரான் ஆகியோரைக் குழுவில் சேர்ப்பதற்காக 100 மில்லியன் பவுண்டுக்குமேல் மேன்யூ செலவுசெய்தது.
இப்படிப் பல முன்னணி ஆட்டக்காரர்களைக் கொண்டிருந்தும் சோல்சியாரால் அவர்களை ஒருங்கிணைத்து, எதிர்பார்த்த நல்ல முடிவுகளைப் பெற்றுத் தர இயலவில்லை. குறிப்பாக, ரொனால்டோ 14 ஆட்டங்களில் ஒன்பது கோல்களை அடித்துள்ளபோதும் மேன்யூ நிலை மேம்படவில்லை.
ஸிடானுக்கு அதிக வாய்ப்பு
இந்நிலையில், மேன்யூ நிர்வாகியாக முன்னாள் பிரெஞ்சு ஆட்டக்காரரும் முன்னாள் ரியால் மட்ரிட் நிர்வாகியுமான ஸினடின் ஸிடான் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக பந்தயப்பிடிப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், லெஸ்டர் சிட்டி நிர்வாகி பிரெண்டன் ரோஜர்ஸ், அயக்ஸ் குழுவின் நிர்வாகி எரிக் டென் ஹேக் ஆகியோரும் அந்தப் போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அடுத்த கோடைப் பருவத்தில்தான் நிரந்தர நிர்வாகி நியமிக்கப்படலாம் என்பதால் பிஎஸ்ஜி நிர்வாகி பொக்கெட்டினோவிற்கும் வாய்ப்பிருக்கிறது.
'சோல்சியார் சிறந்த நிர்வாகிஎன்றாலும், அவரிடம் புதிய உத்திகள் இல்லை என்பதை அண்மைய முடிவுகள் காட்டுகின்றன. யூரோப்பா லீக்கில் வில்லாரியாலிடம் தோற்றபோதே அவரது சரிவு தொடங்கிவிட்டது. ஸினடின் ஸிடான் அல்லது பிரெண்டன் ரோஜர்சை நிர்வாகியாக்க வேண்டும்," என்றார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேன்யூ ரசிகராக இருக்கும் அரசாங்க ஊழியர் ஆறுமுகம், 43.
"மூன்றாண்டுகளாக ஒரு கிண்ணம்கூட வெல்லவில்லை. மேன்யூ போன்ற ஒரு பெரிய குழுவிற்கு இது மிக நீண்டகாலம்தான். ஸிடான் போன்று கிண்ணங்களை வென்று சாதித்துள்ள, வீரர்கள் மதிக்கக்கூடிய ஒருவரை நிர்வாகியாக நியமிக்க வேண்டும்," என்றார் 27 ஆண்டுகளாக மேன்யூ ரசிகராக இருக்கும் தொழில்முனைவர் மார்ட்டின் ஸ்டீஃபன், 42.

