செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

அடுத்த ஐபிஎல் இந்தியாவில்

சென்னை: அடுத்த ஆண்டிற்கான இந்திய பிரிமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில்தான் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். லக்னோ, அகமதாபாத் என மேலும் இரு அணிகள் உருவாவதை அடுத்து, 2022 ஐபிஎல்லில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும். கொவிட்-19 பரவல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் முதல் பாதி இந்தியாவிலும் பிற்பாதி ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலும் நடத்தப்பட்டது.

அறிமுக ஆட்டத்திலேயே அடி; மருத்துவமனையில் அனுமதி

காலே: இலங்கை அணிக்கெதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி மூலமாக அனைத்துலக கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார் வெஸ்ட் இண்டீசின் ஜெரமி சோலோசனோ, 26. ஆடுகளத்திற்கு அருகே களக்காப்பு செய்தபோது, 24வது ஓவரில் இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்னே அடித்த பந்து, சோலோசனோவின் தலையைத் தாக்கியது. தலைக்கவசம் அணிந்திருந்த போதும் திடலிலேயே அவர் விழுந்துவிட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்.

ஜோக்கோவிச் வெளியேற்றம்

டூரின்: தொடர்ந்து ஆறாவது முறையாக 'ஏடிபி ஃபைனல்ஸ்' டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டும் என்ற உலகின் முதல்நிலை ஆட்டக்காரர் நோவாக் ஜோக்கோவிச்சின் கனவைக் கலைத்தார் மூன்றாம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ். அத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் 7-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்வெரவ்விடம் வீழ்ந்தார் ஜோக்கோவிச். இதனிடையே, கொவிட்-19 தடுப்பூசி போடாததால் 2022 ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியில் ஜோக்கோவிச் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.