கோல்கத்தா: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி
யிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.
கோல்கத்தாவில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ஓட்டங்களைக் குவித்தது.
அணித் தலைவர் ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 31 பந்துகளில் 56 ஓட்டங்களும் இஷான் கிஷன் 29 ஓட்டங்களும் தீபக் சாஹர் 21 ஓட்டங்களும் எடுத்தனர்.
சாண்ட்னெர் 3 விக்கெட்களையும் போல்ட், ஆடம் மிலின், ஃபிர்குசன், சோதி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து 17.2 ஓவர்களில் 111 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இந்தியா 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் மார்ட்டின் குப்தில் அதிகபட்சமாக 51 ஓட்டங்கள் எடுத்தார். அக்சர் பட்டேல் 9 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்சல் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் தீபக் சாஹர், யசுவேந்திர சாஹல், வெங்கடேஷ் ஐயர்் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணி 3-0 எனும் கணக்கில் தொடரைக் கைப்பற்றி நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது.
ஏற்கனவே ஜெய்ப்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் ராஞ்சியில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
ரோகித் சர்மா-ராகுல் டிராவிட் புதிய கூட்டணி முதல் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றி சாதித்தது.
போட்டிக்கு பிறகு பேசிய ரோகித் சர்மா சுழற்பந்து வீரர்
களுக்குப் பாராட்டு தெரிவித்தார். "இந்த தொடரில் சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அக்சர் பட்டேல், ஹர்சல் படேல் தங்களது திறமைகளை வெளிப்
படுத்தி இருந்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த சாஹலும் நன்றாகப் பந்து வீசினார்," என்றார் அவர்.