செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read

மேலும் ஒரு முன்னாள் எஸ்ஸெக்ஸ் வீரர் புகார்

லண்டன்: தான் இனரீதியாகத் தூற்றப்பட்டதாக இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் விளையாட்டாளரான ஜாகித் அகமத் கூறியுள்ளார். இவ்வாறு புகார் கொடுத்திருக்கும் மூன்றாவது முன்னாள் எஸ்ஸெக்ஸ் வீரர் இவர்.

அவ்வணியில் இருந்தபோது எப்போதுமே தான் ஓர் அந்நியன் என்ற உணர்வு தனக்கு இருந்ததாக ஜாகித் தெரிவித்தார். இவர் எஸ்ஸெக்ஸுக்கு 2005ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டுவரை விளையாடினார். அணியின் மூத்த பயிற்றுவிப்பாளர் ஒருவர் மனவருத்தம் ஏற்படும் வகையில் தன்னைத் தொந்தரவு செய்ததாகவும் இதர சில பயிற்றுவிப்பாளர்களும் விளையாட்டாளர்களும் தனது குரலைக் கேலி செய்ததாகவும் ஜாகித் கூறினார்.

தாங்கள் இனரீதியாகத் தூற்றப்பட்டதாக சோஹெப் ஷாரிஃப், மோரீஸ் சேம்பர்ஸ் ஆகிய முன்னாள் எஸ்ஸெக்ஸ் வீரர்களும் இதற்கு முன் தெரிவித்திருந்தனர். தங்கள் அணியில் தூற்றப்பட்டோர் முன்வந்து புகார் கொடுக்க வகைசெய்ய எஸ்ஸெக்ஸ் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

சீனா: பெங் ஷுவாய் விவகாரம் மிகைப்படுத்தப்பட்டது

பெய்ஜிங்: சீனாவின் டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய் சம்பந்தப்பட்ட விவகாரம் உள்நோக்கத்துடன் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாடு கூறியுள்ளது. இந்த சர்ச்சை குறித்து சீனா முதன்முறையாக நேரடியாகப் பதிலளித்துள்ளது. சீனாவின் முன்னாள் துணைப் பிரதமருக்கு எதிராகப் பாலியல் வன்முறைப் புகாரை பெங் முன்வைத்தார். அதற்கு சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு காணாமற்போனார். தற்போது மீண்டும் வெளிவந்துள்ளார். எனினும், பெங்கின் நலன் குறித்த கேள்விகள் தொடர்ந்து இருந்துவருகின்றன.

இதற்கிடையே, இவ்விவகாரத்தை அனைத்துலக ஒலிம்பிக் குழு சரியாகக் கையாளவில்லை என்ற கருத்து முற்றிலும் அர்த்தமில்லாதது என்று அதன் மூத்த அதிகாரி டிக் பவுண்ட் கூறியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பெங், ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பாக்கிடம் பேசினார். அதன் மூலம் பெங்கின் நலனைப் பாதுகாப்பது குறித்து முயற்சி ஏதும் எடுக்கப்படவில்லை என்று டென்னிஸ் தலைவர்களும் மனித உரிமைக் குழுக்களும் குறைகூறின. ஆனால் அந்நடவடிக்கையால் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அது சரியான அணுகுமுறையே என்றும் திரு பவுண்ட் தற்காத்துப் பேசினார்.

குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ரியால் மட்ரிட் நட்சத்திரம்

பாரிஸ்: ஸ்பெயினின் பிரபல காற்பந்து அணியான ரியால் மட்ரிட்டின் வீரரான பிரான்சைச் சேர்ந்த கரீம் பென்சேமாவிற்கு (படம்) ஓராண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் காணொளியைக் கொண்டு மிரட்டி தனது சக பிரெஞ்சு விளையாட்டாளராக இருந்த மேத்தியூ வால்புவேனாவிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக பென்சேமா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்து. அது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், 75,000 யூரோ (84,000 வெள்ளி) தொகையைச் செலுத்துமாறும் நீதிபதி இவருக்கு உத்தரவிட்டார்.

வால்புவேனாவிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக சென்ற மாதம் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஐவரில் பென்சேமாவும் ஒருவர். இவ்வழக்கினால் பென்சேமா, வால்புவேனா இருவரும் பிரான்ஸ் அணியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

சம்பவம் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற பிரான்ஸ் அணியின் காற்பந்து பயிற்சி முகாமில் நிகழ்ந்தது.