பார்சிலோனா: யுயேஃபா சாம்பியன்ஸ் காற்பந்துப் போட்டியில் போர்ச்சுகலின் பென்ஃபீக்காவுடன் கோலின்றி சமநிலை கண்டுள்ளது வரலாற்றில் இப்போட்டியைப் பலமுறை வென்றுள்ள ஸ்பெயினின் பார்சிலோனா. ஈ பிரிவில் அடுத்ததாக ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கை வெல்லாவிட்டால் பார்சிலோனா போட்டியின் இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெறாமல் வெளியேறக்கூடும்.
மிகவும் சிறந்த அணியான பயர்னிடம் சென்ற ஆண்டு 8-2 எனும் கோல் கணக்கில் படுதோல்விஅடைந்தது பார்சிலோனா. சென்ற பருவமும் அதற்கு எதிராக 3-0 எனும் கோல் கணக்கில் தோல்விஅடைந்தது.
எனினும், இம்முறை தனது அணியால் பயனை வெல்லமுடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார் பார்சிலோனாவின் புதிய பயிற்றுவிப்பாளரான ஷாவி ெஹர்னாண்டெஸ். "அணி இவ்வாறு விளையாடுவதைப் பார்க்கும்போது எனக்கு நம்பிக்கை வருகிறது," என்று ஷாவி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "இவ்வாறு விளையாடினால் எந்த அணியுடனும் போட்டியிடலாம். இதைப் பார்க்கும்போது (பென்ஃபீக்காவிற்கு எதிராக பார்சிலோனா விளையாடிய விதம்) மியூனிக் நகருக்குச் சென்று (பயர்னை) வெல்லமுடியும் என்பது தெரிகிறது. நமது நிலையை நம்மால் தீர்மானித்துக்கொள்ளமுடியும் என்பதே (பயர்னை வெல்வதன் மூலம்) நம்பிக்கை தரும் ஒன்று," என்று ஷாவி சொன்னார்.
இந்த சாம்பியன்ஸ் லீக் பருவத்தைப் படுமோசமாகத் தொடங்கிய பார்சிலோனா இவ்வளவு தூரம் மீண்டுவந்துள்ளதே பாராட்டப்படவேண்டிய ஒன்று. எனினும், இவ்வணியில் முன்பிருந்த கம்பீரத்தைத் தற்போது காணவில்லை.

