லண்டன்: யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்திவருகிறது நடப்பு வெற்றியாளர் அணியான செல்சி. பல தரப்பினர் மான்செஸ்டர் சிட்டி மீது கவனம் செலுத்திவந்தாலும் அதைவிடச் சிறப்பாக ஆடிவந்துள்ளது இங்கிலீஷ் பிரிமியர் லீக்கைச் சேர்ந்த செல்சி.
இத்தாலியின் யுவென்டஸை 4-0 எனும் கோல் கணக்கில் செல்சி கதிகலங்கச் செய்தது. ஹெச் பிரிவிலிருந்து யுவென்டஸ் அடுத்த சுற்றுக்குச் செல்வது ஏற்கெனவே உறுதியான ஒன்று. இருந்தாலும் இத்தனை கோல் வித்தியாசத்தில் யுவென்டஸ் போன்ற சிறந்த அணியை வெல்வது சாதாரணமன்று.
சில மாதங்களுக்கு முன்பு சிரமப்பட்டுவந்த செல்சியின் தலையெழுத்தை மாற்றியுள்ளார் புதிய நிர்வாகி தாமஸ் டூக்கல். சென்ற பருவம் சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்று தந்ததோடு இவ்வணியைத் தற்போது பிரிமியர் லிக்கில் முதலிடத்தில் வைத்துள்ளார்.