மான்செஸ்டர்: யுயேஃபா சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் ஏ பிரிவு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டியிடம் தோல்வியடைந்துள்ளது பிஎஸ்ஜி. சென்ற பருவத்தின் போட்டியிலும் அரையிறுதிச் சுற்றில் இங்கிலீஷ் பிரிமியர் லீக் அணியான சிட்டியிடம் தோல்வியடைந்தது பிரான்சின் பிஎஸ்ஜி. இப்போட்டியில் பிஎஸ்ஜிக்கு முட்டுக்கட்டையாக இருக்கத் தொடங்கிவிட்டது சிட்டி.
இவ்வாட்டத்தை 2-1 எனும் கோல் கணக்கில் சிட்டி வென்றது. இரு அணிகளும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இருந்தாலும் எந்நேரமும் மான்செஸ்டர் யுனைடெட்டின் அடுத்த நிர்வாகியாக ஆகக்கூடும் எனப் பரவலாகப் பேசப்படும் பிஎஸ்ஜி பயிற்றுவிப்பாளர் மொரிச்சியோ பொக்கட்டினோ, ஆட்டத்தின்போது மிகவும் அமைதியாகக் காணப்பட்டது சில தரப்பினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தோல்வியடைந்தபோதும் தான் அணியைவிட்டுப் போகக்கூடும் என்ற வதந்தி பிஎஸ்ஜி வீரர்களைப் பாதிக்கவில்லை எனக் கூறினார் பொக்கட்டினோ. "விளையாட்டாளர்களுக்கு நிலைமை நன்றாகப் புரியும் - இத்துறையில் வதந்திகள் இருந்துகொண்டேதான் இருக்கும், அவற்றில் சில நம்பிக்கை தருபவை, சில எதிர்மறையானவை. அப்படித்தான் இந்த வதந்திகளையும் நாங்கள் பார்க்கிறோம்," என்று பொக்கட்டினோ குறிப்பிட்டார்.
உடனடியாக பொக்கட்டினோவைத் தனது நிர்வாகியாக நியமிப்பது குறித்து யுனைடெட் கேட்டதற்கு பிஎஸ்ஜி திட்டவட்டமாக மறுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்விவகாரம் குறித்து பொக்கட்டினோ இதுவரை எதுவும் பகிர்ந்துகொள்ளவில்லை. பிஎஸ்ஜியில் அவர் சிலருடன் ஒத்துப்போகவில்லை என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட பிஎஸ்ஜியை வென்றதன் மூலம் சிட்டி தனது ஆற்றலை வெளிப்படுத்தியதாகச் சொன்னார் இவ்வணியின் நிர்வாகி பெப் குவார்டியோலா.
"பிஎஸ்ஜி - அருமையான அணி, சிறப்பான விளையாட்டாளர்கள், நான் சொல்லவேண்டுமோ? இத்தகைய வீரர்களை எங்கள் வலைக்கு அருகே வராமல் செய்ய முயன்றோம். அருகே வந்தால் அவர்களால் என்னவேண்டுமானாலும் செய்யமுடியும்," என்றார் குவார்டியோலா. சிட்டி, பிஎஸ்ஜி இரண்டும் சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இதுவரை ஏமாற்றம் தந்துள்ளன.