லிவர்பூல்: இப்பருவத்தில் மிகவும் கவர்ச்சியாக விளையாடிவருகிறது யுயேஃபா சாம்பியன்ஸ் லீக்கில் இதுவரை ஆடிய ஐந்து ஆட்டங்களையும் வென்றுள்ள இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான லிவர்பூல். சென்ற பருவம் பெரிதும் சிரமப்பட்டாலும் இம்முறை லிவர்பூல் பிரிமியர் லீக், சாம்பியன்ஸ் லீக் இரண்டிலும் அபாரமாக ஆடிவருகிறது.
சாம்பியன்ஸ் லீக் போட்டியின் பி பிரிவு ஆட்டத்தில் போர்ச்சுகலின் எஃப்சி போர்டோவை 2-0 எனும் கோல் கணக்கில் வென்றது லிவர்பூல். தியாகோ அல்கான்டரா, முகமது சாலா இருவரும் அபாரமான கோல்களைப் போட்டனர்.
லிவர்பூல் இரண்டாம் சுற்றுக்குத் தகுதிபெறுவது ஏற்கெனவே உறுதியானதால் இவ்வணியின் நிர்வாகி யர்கன் கிளாப் அடிக்கடி விளையாடும் சில வீரர்களுக்கு ஓய்வளித்தார். அப்படியிருந்தும் வெற்றிபெற்றது 2019ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய லிவர்பூல்.
"இவ்வாட்டத்தில் நாங்கள் அதிக அக்கறை காட்டமாட்டோம் என்று சிலர் நினைத்திருக்கலாம், ஆனால் எங்களின் நோக்கம் அதுவல்ல, ஆன்ஃபீல்ட் (லிவர்பூலின் சொந்தத் திடல்) அரங்கில் அனைத்து இருக்கைகளிலும் ரசி்கர்கள் இருந்தனர், அதனால் முழு வீறியத்துடன் ஆட்டத்தில் களமிறங்க எண்ணினோம்," என்று கிளாப் கூறினார். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் ஆகச் சிறப்பாகச் செய்துள்ள இங்கிலாந்து அணி என்ற பெருமை லிவர்பூலுக்கு உண்டு.
பிரிமியர் லீக்கில் பல ஆண்டுகள் சரியாக ஆடாவிட்டாலும் இப்போட்டியில் ஓரளவு சிறப்பாகவே விளையாடிவந்துள்ளது லிவர்பூல். 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தையும் சென்ற ஆண்டு வென்றது. மீண்டும் வெற்றிப் பாதையில் கம்பீரமாக நடக்கிறது லிவர்பூல்.

