சுசுகி கிண்ண லயன்ஸ் இறுதி அணியில் 11 புதிய வீரர்கள்
சிங்கப்பூர்: சுசுகி கிண்ணத்தை நான்கு முறை வென்றுள்ள லயன்ஸ் அணி அந்தப் போட்டியில் புதிய வரவுகளாக 11 பேரை களமிறக்க உள்ளது.
சுசுகி கிண்ணப் போட்டியின் இறுதி அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் குழுவில் 11 புதிய வீரர்களை சேர்க்க அணியின் பயிற்றுவிப்பாளர் டாட்சுமா யோஷிடா முடிவு செய்துள்ளார்.
கோல்காப்பாளராக ஸர்ஃபான் ரோஹைசாட், தற்காப்பு வீரர்களாக நூர் ஆதாம் அப்துல்லா, இக்ராம் ரிஃப்கி, தஜெலி சலாமாட், மத்திய திடல் வீரர்களாக சைஃபுலா அக்பர், ஹமி சியாஹின் இவர்களுடன் கொரியாவில் பிறந்த சோங் உய் யங் ஆகியோருடன் தாக்குதல் ஆட்டக்காரர்களாக ஏமி ரெச்சா, ஹவிஃஸ் நோர், ஷவல் அனுவார், இல்ஹான் ஃபாண்டி ஆகிய 11 பேரும் புதிதாக அணியில் சேர்க்கப்பட்டு சுசுகி கிண்ணப் போட்டியில் பங்குபெறுவர்.
இவர்களில் முதலில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த இல்ஹான் இறுதி அணியில் சேர்க்க பயிற்றுவிப்பாளரான யோஷிடா முடிவு செய்துள்ளார்.
இதன்மூலம் முன்னாள் காற்பந்து பிரபலம் ஃபாண்டி அகமதுவின் இரு புதல்வர்களான இர்ஃபான், இல்ஹான் இருவரும் குழுவில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
சுசுகி கிண்ணக் குழு பற்றிக் கருத்துக்கூறிய யோஷிடா,
"தற்காலிகமாக ஒரு குழுவைத் தேர்வு செய்தபின் அவர்களுடைய நடத்தை, மனப்போக்கு, குணாதிசயம், உடலுறுதி போன்றவற்றை என்னால் காண முடிந்தது," என்று தேர்வுக்கான காரணங்களை தெளிவுபடுத்தினார்.
பலோன் டி ஓர் காற்பந்து விருது; லெவன்டாவ்ஸ்கிக்கு வாய்ப்பு
பாரிஸ்: பலோன் டி ஓர் என்ற சிறந்த காற்பந்து வீரருக்கான விருதை வழக்கமாக லயனல் மெஸ்ஸியும் ரொனால்டோவும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்கு இடையே ஒருவர் பெறுவர்.
ஆனால் இம்முறை அந்த விருது ராபர்ட் லெவன்டாவ்ஸ்கி என்ற பயர்ன் மியூனிக் வீரருக்கு போகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயர்ன் மியூனிக் குழுவுக்கும் போலந்து நாட்டுக்கும் விளையாடும் இவர் ஜெர்மனியின் புண்டஸ்லீகா இதுவரை விளையாடிய 29 ஆட்டங்களில் 41 கோல்கள் போட்டு தன்னிகரற்று விளங்குகிறார். ஜெர்மனியின் முன்னாள் காற்பந்து வீரரும் இவரைப்போல் பயர்ன் மியூனிக் குழுவுக்கு விளையாடியவருமான கெர்ட் முல்லரின் சாதனையை இவர் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபிஃபா எனப்படும் அனைத்துலக காற்பந்து கூட்டமைப்பின் சிறந்த ஆடவர் பிரிவு வீரருக்கான விருதை வென்றுள்ள லெவன்டாவ்ஸ்கிக்கு பயர்ன் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜுலியன் நகல்ஸ்மான் என்பவரின் ஆதரவும் சக பயர்ன் வீரரான தாமஸ் முல்லர் என்பவரின் ஆதரவும் உள்ளது.
"அவர் தற்பொழுது விளையாடி வருவதைப் பார்த்தால், திங்கள்கிழமை (இன்று) நடைபெறவுள்ள தேர்வில் லெவிதான் விருதைத் தட்டிச் செல்ல வேண்டும்." என்று தாமஸ் முல்லர் உறுதிபடக் கூறினார். இதேபோல், நகல்ஸ்மான், "நம்ப முடியாத வகையில் லெவி ஆடி வருவ தால் அவர்தான் விருதை வெல்ல வேண்டும்," என்று கூறுகிறார். இந்நிலையில், சென்ற பருவத்தில் பார்சி லோனாவில் விளையாடிய மெஸ்ஸி 30 கோல்கள் போட்டது குறிப்பிடத்தக்கது.

