கிரிக்கெட் துளிகள்

கிரிக்கெட் துளிகள்

2 mins read

வீராசாமியின் சுழலில் சுருண்டது இலங்கை

காலே (இலங்கை): வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை கிரிக்கெட் அணி 204 ஓட்டங்களுக்குச் சுருண்டது. அதற்கு முக்கியக் காரணமாக அமைந்தார் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் வீராசாமி பெருமாள். அவர் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். இன்னொரு சுழற்பந்து வீச்சாளரான ஜோமெல் வாரிக்கன் இலங்கை அணியின் நான்கு ஆட்டக்காரர்களை வெளியேற்றினார். இலங்கை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசாங்கா 73 ஓட்டங்களை எடுத்தார்.

அதன்பின் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ஓட்டங்களை எடுத்திருந்தது. ஜெர்மேன் பிளாக்வுட் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அணித் தலைவர் கிரெய்க் பிரத்வெயிட் 22 ஓட்டங்களுடனும் போனர் ஓர் ஓட்டத்துடனும் களத்தில் இருக்கின்றனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 187 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது.

அபித் அலி அபாரம்; பாகிஸ்தான் வெற்றி

சட்டோகிராம் (பங்ளாதேஷ்): பங்ளாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 133 ஓட்டங்களைக் குவித்த அவ்வணியின் தொடக்க வீரர் அபித் அலி, இரண்டாம் இன்னிங்சிலும் 91 ஓட்டங்களை எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். முதல் இன்னிங்சில் பங்ளாதேஷ் 330 ஓட்டங்களையும் பாகிஸ்தான் 286 ஓட்டங்களையும் எடுத்தன. 2வது இன்னிங்சில் 157 ஓட்டங்களுக்குச் சுருண்டுபோக, பாகிஸ்தான் 203 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.