சூறாவளியாக வீசும் லிவர்பூல்

2 mins read
b1b50135-57bd-4a80-83e3-3a67b78bda89
கோல்களைக் குவித்த வண்ணம் இருக்கும் லிவர்பூலுக்கு மெருகூட்டிவரும் மோ சாலா (வலது) எவர்ட்டனுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்களை அடித்தார். படம்: இபிஏ -

லிவர்­பூல்: இங்­கிலிஷ் பிரி­மி­யர் லீக்­கில் தொடர்ந்து மூன்­றா­வது ஆட்­டத்­தில் நான்கு கோல்­க­ளைப் போட்டுள்­ளது லிவர்­பூல் காற்­பந்து அணி. பிரி­மி­யர் லீக்­கில் இது­வரை லிவர்­பூல் 43 கோல்­க­ளைப் போட்டி­ருக்­கிறது. லீக்­கில் இவ்­வ­ணியே ஆக அதிக கோல்­க­ளைப் போட்டுள்­ளது. மேலும், காற்பந்து உலகில் ஐரோப்­பா­வின் ஆகப் பெரி­ய­தா­கக் கரு­தப்­படும் ஐந்து நாடு­க­ளைச் சேர்ந்த லீக்­கு­கள் எதி­லும் ஜெர்­மனி­யின் பயர்ன் மியூ­னிக் உட்­பட வேறு எந்த அணி­யும் இத்­தனை கோல்­க­ளைப் போட­வில்லை. பிரிமியர் லீக்கில் லிவர்­பூ­லுக்கு அடுத்­த­ப­டி­யாக ஆக அதிக கோல்­க­ளைப் போட்­டி­ருக்­கும் செல்­சிக்­குக்­கூட இதனைவிட 10 கோல்­கள் குறைவு. தனது பரம வைரி­யான எவர்ட்­டனை 4-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­திய லிவர்­பூ­லுக்கு இரண்டு கோல்­க­ளைப் போட்­டார் மோ சாலா. கடந்த சுமார் ஓராண்­டாக மான்­செஸ்­டர் சிட்­டி­யின் கெவின் டி பிரோய்ன, டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­ப­ரின் ஹேரி கேன் ஆகி­யோ­ரிடம் சென்ற ரசி­கர்­களின் கவ­னம் இப்­ப­ரு­வத்­தில் மீண்­டும் சாலா பக்­கம் திரும்­பு­கிறது. குழு­வாக மிக­வும் அபா­ரமாக ஆடி­வ­ரும் லிவர்­பூ­லுக்கு மேலும் விறு­வி­றுப்­பைத் தரு­கிறது சாலா­வின் சாக­சம்.

"நாம் இது­வரை சில ஆட்­டங்­களில் சிறப்­பாக விளை­யா­டி­யி­ருக்­கி­றோம் ஆனால், இதில் ஆடிய அள­வுக்கு இல்லை; இன்று இருந்த அளவு நிதா­ன­மாக விளை­யா­டி­ய­தில்லை, இவ்­வ­ளவு அபா­ர­மாக ஆடி­ய­தில்லை. அத­னால்­தான் இவ்­வாட்­டத்தை வென்­றோம், அதை நினைத்து நான் பெரும் மகிழ்ச்சி­யடை­கி­றேன்," என்­றார் லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளாப். "நான் லிவர்­பூ­லில் சேர்ந்த பிறகு குடி­சன் பார்க் (எவர்ட்­ட­னின் சொந்­தத் திடல்) அரங்­கில் விளை­யா­டி­ய­தில் இதுவே ஆகச் சிறப்­பா­னது," என்­றும் கிளாப் குறிப்­பிட்­டார்.

லீக் பட்­டி­ய­லில் தற்­போது மூன்­றாம் இடத்­தை வகித்­தா­லும் லிவர்­பூல் எந்­நே­ர­மும் முத­லி­டத்­தைப் பிடிக்­கக்­கூ­டும் என்ற உணர்வு எழு­கிறது. எனி­னும், அடுத்த மாதம் தொடங்­க­வுள்ள ஆப்­பி­ரிக்க தேசிய அணி­க­ளுக்­கான 'ஆப்­பி­ரிக்கன் நேஷன்ஸ்' கிண்­ணப் போட்­டி­யில் லிவர்­பூ­லின் செனகல் வீரர் சாடியோ மானே, எகிப்தின் சாலா இரு­வ­ரும் தங்­க­ளின் தேசிய அணி­க­ளைப் பிர­தி­நி­தித்து ஆடு­வர். அப்போது இவ்­வி­ரு­வ­ரும் இல்­லா­மல் ஆட்­டங்­களை வெல்­லும் சவாலை லிவர்­பூல் எதிர்­நோக்­கும்.

இப்­ப­ரு­வத்­தின் தொடக்­கத்­தில் சிறப்­பாக ஆடிய எவர்ட்­டன், கடந்த எட்டு லீக் ஆட்­டங்­க­ளில் வெல்­ல­வில்லை. இத­னால் எவர்ட்­ட­னைத் தற்­போது வழி­ந­டத்­தும் முன்­னாள் லிவர்­பூல் நிர்­வாகி ராஃபா பெனிட்­டெஸ் நெருக்­கு­த­லுக்கு ஆளா­கி­யி­ருக்­கி­றார். எனி­னும், பெனி­டெ­ஸுக்கு முன்­னால் இருந்த நிர்­வாகி­க­ளா­லும் இவ்­வ­ணியைச் சிறப்­பா­க விளையாட வைக்க முடி­ய­வில்லை. கடை­சி­யாக டேவிட் மோயெஸ்­தான் சிறப்­பா­கச் செய்­தார்.