வெஸ்ட் ஹேமிடம் அதிர்ச்சித் தோல்வியுற்று பட்டியலில் மூன்றாமிடத்திற்கு இறங்கியது செல்சி
லண்டன்: இப்போதைக்கு இங்கிலிஷ் பிரிமியர் காற்பந்து லீக்கில் இவர்தான் சிறந்த ஆட்டக்காரர் என்று மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி பெப் கார்டியோலாவின் புகழாரம் சூட்டியது சரிதான் என்பதை மெய்ப்பித்துக்காட்டினார் பெர்னார்டோ சில்வா.
வாட்ஃபர்ட் குழுவிற்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சில்வா இரண்டு கோல்களை அடிக்க, 2-1 என்ற கணக்கில் சிட்டி வென்றது.
முன்னதாக நடந்த ஆட்டத்தில், முதலிடத்தில் இருந்த செல்சி 2-3 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டிடம் மண்ணைக் கவ்வியது.
இதனால், சிட்டி குழு 35 புள்ளிகளுடன் முதலிடத்திற்குத் தாவியது.
சென்ற வார நடுவில் ஆஸ்டன் வில்லா குழுவிற்கு எதிராக அருமையானதொரு கோல் அடிக்க, சில்வாவை இப்படிப் புகழ்ந்திருந்தார் கார்டியோலா.
"எனது வார்த்தைகளைப் பொய்யாக்காத பெர்னார்டோவிற்கு நன்றி. தன்னடக்கமுள்ளவர் அவர். முன்னணி வீரர்கள் பலர் விளையாடும் பிரிமியர் லீக்கில் அவர் சிறப்பாக ஆடி வருகிறார்," என்றார் கார்டியோலா.
பிரிமியர் லீக்கில் தாம் கடைசியாக ஆடிய 12 ஆட்டங்களில் ஏழு கோல்களைப் போட்டுள்ளார் சில்வா.
வாட்ஃபர்டுக்கு எதிரான ஆட்டத்தில், நான்காம் நிமிடத்திலேயே சிட்டிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார் ரஹீம் ஸ்டெர்லிங். இது, பிரிமியர் லீக்கில் அவர் போட்ட 99வது கோல்.
கடைசியில் கைகூடிய வெற்றி
இதனிடையே, நேற்று முன்தினம் நடந்த மற்றோர் ஆட்டத்தில், பிற்பாதியின் முடிவில் இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் டிவக் ஒரிகி அடித்த கோலால், லிவர்பூல் 1-0 என்ற கணக்கில் உல்வ்ஸ் குழுவை வெற்றிகொண்டது.
மாற்றுவீரராக வந்தபோதும் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானம் செய்த 26 வயது ஒரிகியை 'ஆட்டத்தை முடித்து வைப்பதில் வல்லவர்' என்று வெகுவாக மெச்சினார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
"ஒருநாள் என் பேரப்பிள்ளைகளை அழைத்துச் சென்று, டிவக் ஒரிகியின் சிலையைக் காட்டுவேன். என்ன ஓர் ஆட்டக்காரர்!" என ஒரிகியை வானளாவப் புகழ்ந்தார் சக லிவர்பூல் வீரரான ஆண்டி ராபர்ட்சன்.
லிவர்பூல் சார்பில் ஒரிகி பங்கேற்ற 100வது ஆட்டம் இது. அக்குழு சார்பில் லீக் போட்டிகளில் இதுவரை 21 கோல்களைப் போட்டுள்ளார் அவர். அவற்றில் கிட்டத்தட்ட பாதி கோல்கள் மாற்று வீரராகக் களமிறங்கி அடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றியைத் தொடர்ந்து, சிட்டியைவிட ஒரு புள்ளி மட்டுமே குறைவாகப் பெற்று, இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது லிவர்பூல்.
முன்னதாக, 87வது நிமிடத்தில் கோலை விட்டுத் தந்து, வெஸ்ட் ஹேமிடம் தோற்று அதிர்ச்சியளித்த செல்சி, 33 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டது.

