நோவாக் ஜோக்கோவிச் உள்ளே
சிட்னி: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய டென்னிஸ் பொதுவிருதில் பங்கேற்க நோவாக் ஜோக்கோவிச் சேர்க்கப்பட்டுள்ளார். கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டாரா என்பதை ஜோக்கோவிச் தெரிவிக்காததால் போட்டியில் அவர் இடம்பெறுவது கேள்விக்குறியாக இருந்தது. எனினும், பங்கேற்போர் பட்டியலில் செரினா வில்லியம்ஸ் இடம்பெறவில்லை.
சகாப்தம் நிறைவடைகிறது
ஜெடா: அபுதாபியில் இவ்வாரம் நடைபெறவிருக்கும் ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் கடைசி முறையாகப் பங்கேற்கவுள்ளார் பின்லாந்தின் கிமி ரைக்கோனன். இப்பந்தயத்தில் லுயிஸ் ஹேமில்டன், மேக்ஸ் வர்ஸ்டாப்பன் மீதுதான் பலரின் கவனம் இருக்கும் என்றாலும் 42 வயது ரைக்கோனன் ஓய்வுபெறுவது ஒரு சகாப்தம் நிறைவடைவதற்குச் சமம். 20 ஆண்டுகளுக்கு முன் ஃபார்முலா ஒன்றில் களமிறங்கினார் ரைக்கோனன். ஓய்வுபெறுவதில் எந்த வருத்தமும் இல்லை எனச் சொல்லும் இவர், ஃபார்முலா ஒன்றைவிட முக்கியமான பணிகள் தனக்கு இருப்பதாகக் கூறுகிறார்.
ரானிக்கின் மாறுபட்ட அணுகுமுறை
மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட்டின் புதிய நிர்வாகி ரால்ஃப் ரானிக், விளையாட்டாளர்களின் மனநலனைக் கவனிக்க சாஷா லென்ஸ் எனும் விளையாட்டு மனநல ஆலோசகரை நியமித்துள்ளார். இது, பொதுவாக இங்கிலாந்தில் காற்பந்து அணிகள் செய்யாத ஒன்று. எனினும், ஜெர்மனியில் பல அணிகள் இவ்வாறு செய்வதாகச் சொல்கிறார் அந்நாட்டைச் சேர்ந்த ரானிக்.

