மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் தற்பொழுது அமர்ந்திருக்கும் மான்செஸ்டர் சிட்டி குழுவிற்கு சிரம காலம் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அது விளையாடிய கடந்த ஐந்து ஆட்டங்களில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால், சாம்பியன்ஸ் லீக் போட்டியில்
ஆர் பி லைப்ஸிக் குழுவிடம் தோற்றபோதும் சரி, மற்ற நான்கு ஆட்டங்களிலும் சரி, அது எதிரணியினருக்கு கோல்களை விட்டுக் கொடுத்துள்ளது.
மான்செஸ்டர் சிட்டியின் தற்காப்பு அரணில் விரிசல் விழுந்திருப்பதாக பலராலும் பேசப்படுகிறது. இதில் ஏற்பட்ட விரக்தியில்தான் சிட்டியின் கைல் வாக்கர் ஆர் பி லைப்ஸிக்கின் ஆண்ட்ரே சில்வா என்ற வீரர் மீது கடுமையாக மோதி அதற்காக சிவப்பு அட்டை வாங்கி ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் விமர்சிக்கப்படுகிறது. மற்றோர் தற்காப்பு வீரரான ஜான் ஸ்டோன்ஸ் முன்போல் திறமையாக செயல்பட முடியவில்லை என்பதும் கசப்பான உண்மை என்று காற்பந்து ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான் இன்று பின்னிரவில் உல்வர்ஹேம்டன் வாண்டரர்ஸ் குழுவுடன் அது மோத உள்ளது. இந்த உல்வ்ஸ் அணியுடன் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே மான்செஸ்டர் சிட்டி ஆஸ்டன் வில்லா மைதானத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக விளையாடவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த ஆட்டத்தில் சிட்டி தப்பித்தோம் பிழைத்தோம் என்று 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த உல்வ்ஸ் அணியைச் சேர்ந்த எண்மர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர உல்வ்ஸ் அணியில் பல திறமையான இளம் வீரர்களும் மாற்று ஆட்டக்காரர்களாக கள மிறங்க தயாராக உள்ளனர். எனவேதான் சிட்டிக்குச் சிரம காலம் ஆரம்பம் என்று கூறப்படுகிறது.