லிவர்பூல்: ஆஸ்டன் வில்லாவின் நிர்வாகியாக லிவர்பூலின் முன்னாள் நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஜெரார்ட்டின் ஆன்ஃபீல்ட் வருகை ஏமாற்றத்தில் முடிந்தது.
சமநிலை கண்டு குறைந்தது ஒரு புள்ளியுடன் திரும்பியிருந்தால் ஜெரார்ட்டுக்கு அது வெற்றியாக அமைந்திருக்கும்.
ஆனால் அதற்கு முட்டுக்
கட்டையாக இருந்தார் முகம்மது சாலா. பிற்பாதியில், வில்லாவின் பெனால்டி எல்லையில் சாலா விழுந்ததை அடுத்து, லிவர்பூலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் லிவர்பூலுக்குப் பெனால்டி வாய்ப்பு வழங்கப்
பட்டிருக்கக்கூடாது என்று ஜெரார்ட் பிறகு வாதிட்டார்.
தப்பாட்டம் நிகழ்ந்ததா என்று தெளிவாகத் தெரியாத பட்சத்தில் காணொளியைப் பார்த்து நடுவர் முடிவு செய்ய வேண்டும் என்றும் ஆனால் நடுவர் அவ்வாறு செய்யாதது தம்மை அதிர்ச்சியில்
ஆழ்த்தியதாகவும் அவர் கூறி தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
1-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் ஆட்டத்தைக் கைப்பற்றியதை அடுத்து, ஜெரார்ட் மீது வைத்திருக்கும் பாசம் இம்மியளவும் குறையாது லிவர்பூல் ரசிகர்கள் அவரது பெயரை உரக்கச் சொல்லி ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் அதை ஜெரார்ட் கண்டுகொள்ளவில்லை.
மாறாக, அவர் வில்லாவின் ரசிகர்களிடம் சென்று ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களைப் பார்த்து கை அசைத்தார்.
"வில்லா ரசிகர்கள் வழங்கும் ஆதரவுக்கு மட்டுமே நான் முன்னுரிமை தருவேன்," என்று அவர் பட்டென்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

