எஃப்1 நெதர்லாந்தின் முதல் தங்கமகன்

எஃப்1 நெதர்லாந்தின் முதல் தங்கமகன்

2 mins read
f4c36a16-cf6e-4c46-b444-d631e20438df
-

அபுதாபி: இவ்வாண்டுக்கான ஃபார்முலா ஒன் உலக விருதைக் கைப்பற்றியுள்ள மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், தனது கனவுப் பயணத்தை நம்பமுடியாத ஒன்று என்று மிகவும் உணர்ச்சிகரமாகக் கூறியுள்ளார்.

"நான் சிறுவனாக இருந்தபோது ஃபார்முலா ஒன் ஓட்டுநராக இருக்கவேண்டும் என்பதுதான் எனது கனவாக இருந்தது. பந்தயங்களில் வெல்வதைக் கற்பனை செய்து பார்த்ததுண்டு. ஆனால் உலக விருதை வென்றுவிட்டேன் என்று என்னிடம் சொல்லும்போது அது அற்புதமான ஓர் உணர்வு," என்று வெர்ஸ்டாப்பன் சொன்னார்.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைநகர் அபுதாபியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்பருவத்தின் கடைசி பந்தயத்துடைய இறுதிச் சுற்றில் அதிவேகமாகத் தனது வாகனத்தை ஓட்டி லூயிஸ் ஹேமில்டனை பின்னுக்குத் தள்ளி வெற்றிகண்டார், உலக விருதை வென்றுள்ள முதல் நெதர்லாந்து வீரரான வெர்ஸ்டாப்பன். இவ்விருதை எட்டாவது முறையாக வென்று சாதனை படைக்கும் இலக்குடன் இருந்தார் ஹேமில்டன்.

"பந்தயம் முழுவதும் போராடினேன், கடைசி சுற்றில் வெல்வதற்கான வாய்ப்பு அமைந்தது, இது அருமையான ஒன்று," என்றார் ரெட் புல்லின் வெர்ஸ்டாப்பன். பந்தயத்தில் வெர்ஸ்டாப்பன் எடுத்துக்கொண்ட நேரம் ஒரு மணி 30 நிமிடம் 17.345 விநாடி. ஹேமில்டன் இரண்டாவதாக வந்தார், மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் ஸ்பெயினைச் சேர்ந்த ஃபெராரியின் கார்லோஸ் சாய்ன்ஸ்.

இதற்கிடையே, பந்தயத்திற்கு ஒரு மணிநேரத்திற்குப் பிறகு ஹேமில்டனின் மெர்சிடிஸ் குழு இரண்டு எதிர்பபுகளை முன்வைத்தது. பந்தயத்தின் கடைசி நேரத்தில் பாதுகாப்பு வாகனம் ஈடுபடுத்தப்பட்டது விளையாட்டு விதிமுறைகளை மீறுவதாகும் என்று மெர்சிடிஸ் கூறியது. பாதுகாப்பு வாகனம் ஈடுபடுத்தப்பட்டபோதுதான் வெர்ஸ்டாப்பன் ஹேமில்டனை முந்தினார் என்பது அதன் வாதம். ஆனால், மெர்சிடிசின் வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனைத் தொடர்ந்து,, வெர்ஸ்டாப்பனின் வெற்றிக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக மெர்சிடிஸ் தெரிவித்தது.