ஆம்ஸ்டர்டாம்: குழந்தைப் பருவத்திலிருந்தே ஃபார்முலா ஒன் வீரராகும் திறமை தனது மகனிடம் தென்பட்டதாக முன்னாள் ஃபார்முலா ஒன் ஓட்டுநரும் மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் தந்தையுமான ஜோஸ் வெர்ஸ்டாப்பன் கூறியுள்ளார். "அவன் மிகவும் ஆவலாக இருந்தான், நான் பங்கேற்ற எல்லா பந்தயங்களையும் பார்த்தான், அவற்றை நன்கு புரிந்துகொண்டான்," என்று ஜோஸ் வெர்ஸ்டாப்பன் தனது மகனைப் பற்றி ஈராண்டுகளுக்கு முன் கூறியிருந்தார். 1994ஆம் ஆண்டிலிருந்து 2003ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஜோஸ் வெர்ஸ்டாப்பன் ஃபார்முலா ஒன்று பந்தயங்களில் போட்டியிட்டார்.
நான்கே வயதானபோது மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் கோ-கார்ட் வாகனங்களை முதன்முதலில் ஓட்டியதாக ஜோஸ் தெரிவித்தார். "நான் அவனை நினைத்துப் பெருமைப்படுகிறேன்," என்று மகனைப் பற்றிச் சொன்ன ஜோஸ், "இவ்வாண்டு மேக்ஸ்தான் (வெர்ஸ்டாப்பன்) ஆகச் சிறந்த ஓட்டுநர், விருதை வெல்லத் தகுதியானவன்," என்றும் குறிப்பிட்டார்.
ஃபார்முலா ஒன் போட்டியில் வெற்றியைப் பார்க்காமலேயே ஓய்வுபெற்றார் நூற்றுக்கணக்கான கிராண்ட் பிரீ பந்தயங்களில் பங்கேற்ற ஜோஸ் வெர்ஸ்டாப்பன். மேக்ஸ் வெர்ஸ்டாப்பனின் தாயான பெல்ஜியத்தைச் சேர்ந்த சோஃபி கும்பனும், ஒரு முன்னாள் கோ-கார்ட் ஓட்டுநர். அவரது உறவினர்கள் சிலரும் வெவ்வேறு வாகனப் பந்தயங்களில் போட்டியிட்டவர்கள்.
குடும்பத்தாரின் பாதையிலே சென்று அவர்களையும் மிஞ்சி தனக்கும் தனது தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்.

