காற்பந்துத் துளிகள்

காற்பந்துத் துளிகள்

2 mins read

54 வயதிலும் ஓயாத ஜப்பானிய வீரர்

தோக்கியோ: உலகின் ஆக அதிக வயதான தொழில்முறை காற்பந்து வீரரான ஜப்பானியர் கசுயோஷி மியூரா, 54 வயதிலும் தொடர்ந்து விளையாடப்போவதாகக் கூறியுள்ளார். ஜப்பானின் 'ஜே-லீக்'கில் யோக்கோஹாமா அணிக்கு விளையாடிவரும் 'கிங் கசு' எனச் செல்லமாக அழைக்கப்படும் மியூராவைச் சேர்த்துக்கொள்ள இன்னமும் சில அணிகள் முன்வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'ஜே-லீக்'கிற்கு மூன்று கட்டங்களுக்குக் கீழ் உள்ள ஜப்பானின் நான்காவது பிரிவில் இரண்டு அணிகள் மியூராவை நியமிக்க முன்வந்துள்ளன.

மேல்காணும் படத்தில் 2017ஆம் ஆண்டில் மியூரா. கோப்புப் படம் / ரெக்ஸ் ஃபீச்சர்

யுனைடெட்டில் கிருமித்தொற்று

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான மான்செஸ்டர் யுனைடெட்டில் சிலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் சில விளையாட்டாளர்களும் அடங்குவர். யாருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. பிரிமியர் லீக்கில் இன்று பிரென்ட்ஃபர்ட்டைச் சந்திக்கவுள்ளது யுனைடெட். ஆகக் கடைசி நிலவரப்படி இவ்வாட்டம் நடைபெறுமா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை. டாட்டன்ஹம் ஹாட்ஸ்பர் அணியில் சிலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டதால் பிரைட்டனுக்கு எதிரான அதன் பிரிமியர் லீக் ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சிரமப்படும் அட்லெட்டிக்கோ

மட்ரிட்: ஸ்பானிய லீக் நடப்பு வெற்றியாளரான அட்லெட்டிக்கோ மட்ரிட் அணி தொடர்ந்து தடுமாறிவருகிறது. லீக்கில் அதன் பரம வைரியான ரியால் மட்ரிட்டிடம் 2-0 எனும் கோல் கணக்கில் அட்லெட்டிக்கோ தோல்வியடைந்தது. கரீம் பென்ஸீமா, மார்க்கோ அசென்சியோ ஆகியோர் ரியாலின் கோல்களைப் போட்டனர். சென்ற பருவம் அபாரமாக ஆடி ரியால், பார்சிலோனா இரண்டையும் பின்னுக்குத் தள்ளி லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய அட்லெட்டிக்கோ, இப்பருவத்தில் தொடர்ந்து சிறப்பாக ஆட சிரமப்படுகிறது. எட்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தற்போது பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது ரியால். மற்றோர் ஆட்டத்தில் மூன்றாம் இடத்தில் உள்ள ரியால் பெட்டிஸ், ரியால் சோசியடாட்டை 4-0 எனும் கோல் கணக்கில் திக்குமுக்காடச் செய்தது.