பாரிஸ்: பிரெஞ்சு காற்பந்து லீக்கில் தனது பழைய அணியான மொனாக்கோவுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு பிஎஸ்ஜியை வெற்றிபெறச் செய்துள்ளார் கிலியோன் இம்பாப்பே. இவ்வாட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் பிஎஸ்ஜி வென்றது.
சில மாதங்களுக்கு முன் சற்று சிரமப்பட்டுக்கொண்டிருந்த 22 வயது இம்பாப்பே கடந்த சில வாரங்களாக அபாரமாக ஆடிவருகிறார். தனது அணியில் உள்ள இதர நட்சத்திரங்களான நெய்மார், லயனல் மெஸ்ஸி ஆகியோரையும் மிஞ்சி பலரின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துவருகிறார். ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் வரலாற்றில் 30 கோல்களைப் போட்டுள்ள ஆக இளம் வீரர் என்ற பெருமையையும் சென்ற வாரம் பெற்றார் இம்பாப்பே.
பிரெஞ்சு லீக் பட்டியலில் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடத்தை வகிக்கிறது பிஎஸ்ஜி. தொடர்ந்து மூன்று பருவங்களாக லீக் கிண்ணத்தை வென்ற பிறகு சென்ற பருவம் பட்டியலில் இரண்டாம் இடத்தை மட்டுமே இவ்வணி பிடித்தது. இம்முறை அதற்கு ஈடுகட்டவேண்டும் என்ற மனவுறுதி யுடன் விளையாடிவருகிறது.
தற்போது லீக் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது ஒலிம்பிக் மார்செய். நடப்பு வெற்றியாளரான லில் 11வது இடத்தில் உள்ளது.

