நியோன் (சுவிட்சர்லாந்து): ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றில் பிரான்சின் பிஎஸ்ஜியும் ஸ்பெயினின் ரியால் மட்ரிட்டும் பொருதவிருக்கின்றன. இங்கிலிஷ் பிரிமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடெட்டும் ஸ்பெயினின் அட்லெட்டிக்கோ மட்ரிட்டும் மோதவிருக்கின்றன.
மற்றொரு பிரிமியர் லீக் அணியான லிவர்பூல், இத்தாலியின் இன்டர் மிலானைச் சந்திக்கும். இப்போட்டியின் நடப்பு வெற்றியாளரான பிரிமியர் லீக்கின் செல்சி, பிரான்சின் லில்லைச் சந்திக்கும். சென்ற பருவம் இறுதியாட்டத்தில் செல்சியிடம் தோல்வியடைந்த மான்செஸ்டர் சிட்டி, போர்ச்சுகலின் ஸ்போர்ட்டிங் சிபியுடன் மோதும்.
இரண்டாம் சுற்று பெரும்பாலும் பெரிய அணிகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. எனினும், சாம்பியன்ஸ் லீக்கில் எதிர்பாரா முடிவுகள் அடிக்கடி வருவதுண்டு.
முதலில் இடம்பெற்ற குலுக்கலில் தவறு நேர்ந்ததால் அது மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. முதல் குலுக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மான்செஸ்டர் யுனைடெட்டும் லயனல் மெஸ்ஸியின் பிஎஸ்ஜியும் மோதுவது உறுதியானது.
தொழில்நுட்பக் கோளாற்றால் தவறு நேர்ந்ததாக யுயேஃபா எனும் ஐரோப்பியக் காற்பந்து ஒன்றியம் கூறியிருந்தது. அந்தத் தவறில் யுனைடெட், லிவர்பூல், அட்லெட்டிக்கோ ஆகியவற்றின் இரண்டாம் சுற்று ஆட்டங்களின் குலுக்கல் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இரண்டாம் சுற்று ஆட்டங்கள்
1. எஃப்சி சால்ஸ்பர்க் X பயர்ன் மியூனிக்
2. ஸ்போர்ட்டிங் சிபி X மான்செஸ்டர் சிட்டி
3. பென்ஃபிக்கா X ஆயெக்ஸ் ஆம்ஸ்டர்டாம்
4. செல்சி X லில்
5. அட்லெட்டிக்கோ மட்ரிட் X மான்செஸ்டர் யுனைடெட்
6. விலாரியால் X யுவென்டஸ்
7. இன்டர் மிலான் X லிவர்பூல்
8. பிஎஸ்ஜி X ரியால் மட்ரிட்

