சிங்கப்பூர்: தென்கிழக்காசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான சுசுகி கிண்ணப் போட்டியின் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் திமோர் லெஸ்டேயை இன்று வென்றால் அரையிறுதிச் சுற்றுக்கு சிங்கப்பூர் முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். அவ்வாறு நிகழ்ந்தால் ஒன்பது ஆண்டுகளில் முதன்முறையாக சுசுகி கிண்ணப் போட்டியில் முதல் சுற்றை சிங்கப்பூர் தாண்டியதாக இருக்கும்.
இவ்வாண்டுப் போட்டியில் தனது முதல் இரண்டு ஆட்டங்களையும் வென்றது சிங்கப்பூர். உற்சாகத்துடன் ஆடிவரும் இதற்கு திமோர் லெஸ்டே போதுமான சவாலை அளிக்காது எனப் பரவலாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, காயமுற்ற சிங்கப்பூரின் முன்னிலை ஆட்டக்காரரான 30 வயது கேப்ரியல் குவெக் இவ்வாண்டுப் போட்டியில் இனி பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

