அடிலெய்ட்: இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜொஷ் ஹேசல்வுட் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹேசல்வுட்டின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் இந்த ஆட்டத்தில் இடம்பெறமுடியாது.
அனைத்துலக கிரிக்கெட் குழுவின் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாம் இடத்தை வகிக்கிறார் ஹேசல்வுட். ஆஷஸ் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அதிகம் பந்து வீசவில்லை.
கிறிஸ்துமஸுக்கு மறுநாள் ஆஷஸ் தொடரின் மூன்றாவது ஆட்டம் நடைபெறும். அதில் ஹேசல்வுட்டால் ஆடமுடியுமா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெறவுள்ள இரண்டாவது ஆட்டத்தில் ஹேசல்வுட்டின் இடத்தை யார் எடுப்பார் என்பதைப் பற்றியும் ஆகக் கடைசி நிலவரப்படி தகவல் ஏதும் இல்லை. எனினும், ஜை ரிச்சர்ட்சன் அவருக்குப் பதிலாக அணியில் தேர்ந்தெடுக்கப்படலாம் எனச் சில தகவல்கள் கூறுகின்றன.

