விளையாட்டுத் துணுக்குகள்

விளையாட்டுத் துணுக்குகள்

1 mins read

தடுப்பூசியை ஆதரிக்கும் பெரெட்டினி

ரோம்: ஆஸ்திரேலிய பொதுவிருது டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டாளர்கள் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்கு ஆண்கள் டென்னிஸ் உலகத் தரவரிசையில் ஏழாம் இடத்தை வகிக்கும் இத்தாலியின் மட்டேயோ பெரெட்டினி ஆதரவளித்துள்ளார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான இந்த நிபந்தனை சென்ற மாதம் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்டதை உறுதிப்படுத்தாததால் நட்சத்திரம் நோவாக் ஜோக்கோவிச் போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாக ஆனது.

லெவண்டொவ்ஸ்கி தொடர் சாதனை

ஸ்டுட்கார்ட் (ஜெர்மனி): ஜெர்மானிய காற்பந்து லீக்கான பண்டஸ்லீகாவில் ஓராண்டு காலத்தில் ஆக அதிக கோல்களைப் போட்டுள்ள வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பயர்ன் மியூனிக் நட்சத்திரம் ராபர்ட் லெவண்டொவ்ஸ்கி. பண்டஸ்லீகாவில் லெவண்டொவ்ஸ்கி இவ்வாண்டு 42 கோல்களைப் போட்டுள்ளார். 1972ஆம் ஆண்டில் பயர்னுக்கு 42 கோல்களைப் போட்டு சாதனை படைத்திருந்தார் கெர்ட் முல்லர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு அதை முறியடிக்கும் விளிம்பில் இருக்கிறார் லெவண்டொவ்ஸ்கி.

ஒழுங்கின்மையால் பறிபோன பதவி

லண்டன்: ஒழுங்கின்மை காரணமாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து அணியான ஆர்சனலின் அணித் தலைவர் பொறுப்பை இழந்துள்ளார் பியேர்-எமரிக் ஒபமேயாங். நேற்று பின்னிரவு வெஸ்ட் ஹேமிற்கு எதிராக ஆர்சனல் விளையாடவிருந்த ஆட்டத்தில் ஒபமேயாங் இடம்பெறமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமையன்று ஆர்சனலும் சவுத்ஹேம்ப்டனும் மோதிய ஆட்டத்திலும் அவர் இடம்பெறவில்லை. வெளிநாடு சென்ற ஒபமேயாங், தாமதமாகத் திரும்பியதாக சில ஊடகங்கள் தெரிவித்தன. எனினும், இது அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.