லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளது, இப்பருவத்தை நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் மோசமாகத் தொடங்கிய ஆர்சனல். இப்பருவத்திலும் இதுவரை செல்சி, மான்செஸ்டர் சிட்டிதான் சிறப்பாக ஆடியுள்ளன. லிவர்பூலும் அவற்றுக்கு ஈடுகொடுத்துள்ளது. ஒவ்வொரு பருவமும் இது வாடிக்கையான ஒன்றாக இருந்துவரும் நிலையில் அமைதியாக யாரும் எதிர்பாரா வகையில் உயர்கிறது ஆர்சனல்.
நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை 2-0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது. இத்தனைக்கும் வெஸ்ட் ஹேமும் பெரிய அணிகளுக்கு சவால் விடுத்துதான் வருகிறது.
"இவ்வாட்டத்தில் நாங்கள் காண்பித்த குணம், ஈடுபாடு, ஆற்றல் மூன்றும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன," என்று ஆர்சனல் நிர்வாகி மிக்கெல் அர்ட்டெட்டா செய்தியாளர்களிடம் கூறினார். "ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அணியின் விளையாட்டைக் கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன், ஏனென்றால் வெஸ்ட் ஹேமை வெல்ல இன்று நாங்கள் சிறப்பாக ஆடவேண்டும் என்பது எங்களுக்குத் தெரிந்த ஒன்று," என்றும் அர்ட்டெட்டா குறிப்பிட்டார்.
இப்பருவம் தொடங்கியபோது தனது முதல் மூன்று ஆட்டங்களில் ஆர்சனல் தோல்வியடைந்தது. அப்போது இதனைக் கண்டு ஏளனம் செய்த சில ரசிகர்கள் விரும்பும் அணிகளையும் தற்போது மிஞ்சியுள்ளது ஆர்சனல்.
மற்றொரு லீக் ஆட்டத்தில் வுல்வர்ஹேம்ப்டன் வாண்டரர்ஸ், பிரைட்டனை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது. மேலும், சவுத்ஹேம்ப்டனும் கிரிஸ்டல் பேலஸும் மோதிய ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.
பாதிக் கட்டத்தை நோக்கிச் செல்லும் இப்பருவத்தில் பல அணிகள் தொடர்ந்து சிறப்பாக ஆடத் தவறுகின்றன. அதுவே எப்போதும் போல் பெரிய அணிகளுக்குச் சாதகமாக அமைந்துவருகிறது.

