விளையாட்டுத் துணுக்குகள்

விளையாட்டுத் துணுக்குகள்

2 mins read

அடுத்த கட்டம் செல்லும் இக்சான்

சிங்கப்பூர்: நார்வேயின் ஆக உயரிய காற்பந்து லீக்கில் ஆடவிருக்கிறார் சிங்கப்பூர் நட்சத்திரம் இக்சான் ஃபாண்டி (படம்). இவர் விளையாடும் நார்வேயின் எஃப்கே ஜெர்வ் அணி, அந்நாட்டின் இரண்டாம் தரப்பட்டியலில் விளையாடிவந்தது. நேற்று அதுவும் எஸ்கே பிரான் அணியும் மோதிய 'பிளேயாஃப்' தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜெர்வ் வென்றது. இதனைத் தொடர்ந்து இவ்வணி நார்வேயின் ஆக உயரிய 'இலீட்டசரியன்' லீக்கில் போட்டியிடத் தகுதிபெற்றது. இதன் மூலம் தனது ஐரோப்பிய பயணத்தில் அடுத்த கட்டத்திற்குச் செல்கிறார் இக்சான்.

தொடர்ந்து அசத்தும் ஹாலண்ட்

டார்ட்மண்ட் (ஜெர்மனி): ஜெர்மனியின் காற்பந்து லீக்கான பண்டஸ்லீகாவின் கரூத்தர் ஃபர்த்தை 3-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது பொருசியா டார்ட்மண்ட். எனினும், லீக் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் கரூத்தர் ஃபர்த்தை வெல்ல சிரமப்பட்டது டார்ட்மண்ட். இவ்வணிக்கு இரண்டு கோல்களைப் போட்டார் 21 வயது நார்வே நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட். முற்பாதியில் ஹாலண்ட் பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார். ஆட்டம் முடிய எட்டு நிமிடங்கள் எஞ்சியுள்ள நிலையில் தனது இரண்டாவது கோலைப் போட்டார். இப்பருவத்தில் இதுவரை 19 கோல்களைப் போட்டுள்ளார் ஹாலண்ட். லீக் பட்டியலில் டார்ட்மண்ட் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆறு புள்ளிகள் வித்தாசத்தில் பயர்ன் மியூனிக் முதலிடத்தில் உள்ளது.

கரோலினா பிளிஸ்கோவா இல்லை

பிராக்: பெண்கள் ஒற்றையர் டென்னிஸ் உலக் தரவரிசையில் நான்காம் இடத்தை வகிக்கும் கரோலினா பிளிஸ்கோவா, காயமுற்றதால் அடுத்த மாதம் ஆஸ்திரேலிய பொதுவிருதுப் போட்டியில் பங்கேற்கமாட்டார். தனது கையில் காயமடைந்ததால் 29 வயது பிளிஸ்கோவா இப்போட்டியில் பங்கேற்கமாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். பிளிஸ்கோவா மட்டுமின்றி இதர நட்சத்திரங்களான சரீனா வில்லியம்ஸ், பியான்கா ஆண்ட்ரெஸ்கு, ராஜர் ஃபெடரர் ஆகியோரும் ஆஸ்திரேலிய பொதுவிருதுப் போட்டியில் போட்டியிடமாட்டாரக்ள்.