லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் கொள்ளைநோய் பாதிப்பால் பல முக்கிய ஆட்டக்காரர்கள் விளையாட முடியாத நிலையில், நிலைமையை ஒருவாறு சமாளித்து எதிர்த்துப் போட்டியிட்ட நியூகாசலை 3-1 என வெற்றி கொண்டது லிவர்பூல் குழு. இதில் லிவர்பூலுக்கு அலெக்சாண்டர் ஆர்னல்ட் போட்ட கோல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
லிவர்பூல் அணியில் கொரோனா பாதிப்பால் அதன் நட்சத்திர தற்காப்பு ஆட்டக்காரரான வெர்ஜில் வான் டைக், மத்திய திடல் வீரரான ஃபேபின்யோ இருவரும் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
நிலைமை இப்படியிருக்க, ஆட்டம் தொடங்கி ஏழு நிமிடங்களிலேயே நியூகாசலின் ஜோன்ஜோ ஷெல்வி போட்ட கோலால் லிவர்பூல் அதிர்ந்தது.
பின்னர் ஒருவாறு சுதாரித்துக் கொண்ட லிவர்பூல், முதல் பாதி ஆட்டம் முடியும் முன்னரே தாக்குதல் ஆட்டக்காரர்களான டியோகோ ஜோட்டா, முகம்மது சாலா ஆகிய இருவரும் போட்ட கோல்களால் முன்னிலை பெற்றது.
இதனால், பிரிமியர் லீக் தர
வரிசைப் பட்டியலில் நியூகாசல் அணி எப்போதும் போல் கடைசி நிலையிலேயே தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் அலெக்சாண்டர் ஆர்னல்ட் ஆட்டம் முடியும் தறுவாயில் போட்ட கோலால் லிவர்பூல் அணி பட்டியலில் முதல் நிலையில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டிக்கு அருகில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் நிலைக்கு முன்னேறியுள்ளது.
இந்த கோல் பற்றிக் கூறும் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், "என்ன அற்புதமான கோல் அது. அந்த சிறுவன் பந்தை உதைக்கும் விதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது," என்று புகழாரம் சூட்டினார்.
நேற்றைய ஆட்டம் தொடங்கும் முன் கொரோனா கொள்ளைநோய், அதற்கான தடுப்பூசி குறித்த பொய்த் தகவல்களுக்கு செவிசாய்க்காமல் தடுப்பூசி, கூடுதல் தடுப்பூசி மருந்துகளை போட்டுக்கொள்ளும்படி தமது வீரர்களை கிளோப் கேட்டுக்கொண்டார்.
ஆகக் கடைசியாக லிவர்பூல் குழுவில் கர்டிஸ் ஜோன்ஸ் என்ற வீரரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தமது குழுவினர் அனைவரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என்றும் மேற்கொண்டு எவருக்கும் பாதிப்பில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் நிர்வாகி கிளோப்.

