செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

2 mins read

இர்ஃபான் ஃபாண்டியை நாடி வரும் தென்கொரியக் குழு

சிங்கப்பூர்: லயன்ஸ் குழுவின் இளம் தற்காப்பு வீரரான இர்ஃபான் ஃபாண்டி அண்மைய காலங்களில் முதிர்ச்சியடைந்த வீரர் போல் விளையாடுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத் தொடர்ந்து தற்பொழுது தென்கொரிய காற்பந்து வெற்றியாளர் குழுவான ஜியோன்பக் ஹியுண்டாய் அவரை வாங்க முன்வந்துள்ளது. இர்ஃபான் தற்பொழுது தாய்லாந்துக் குழுவான பிஜி பாத்தும் குழுவிற்காக விளையாடி வருகிறார். அவருடைய இந்தக் குழுவும் ஜியோன்பக் குழுவும் ஏஎஃபி சாம்பியன்ஸ் லீக் போட்டி ஒன்றில் மோதியபோது இர்ஃபானின் ஆட்டத்திறன் தென்கொரியக் குழுவை கவர்ந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த ஆட்டத்தில் இரு குழுக்களும் 1-1 என சமநிலை கண்டதால், இர்ஃபானின் தற்காப்புத் திறன் வெளிப்பட்டதாகத் ெதரிவிக்கப்படுகிறது.

இதுபற்றிக் கூறும் இர்ஃபான், "பெரிய பெரிய ஆசிய காற்பந்துக் குழுக்கள் என்னை கவனித்து வருவது நான் நன்றாக விளையாடுகிறேன் என்பதற்கு அடையாளம். இது என்னை மேலும் நன்றாக விளையாட ஊக்குவிக்கும்," என்று கருத்துரைத்துள்ளார்.

"சந்தர்ப்பம் வாய்த்தால், புதிய சவாலை ஏற்று இதைவிட மேல்நிலையில் எனது ஆட்டத்தைத் தொடர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்," என்று இர்ஃபான் விளக்கினார்.

எனினும், இர்ஃபானின் பாத்தும் குழு அவரை எளிதில் விடுவதாக இல்லை. அதற்கு விலையாக அவர்கள் 30 மில்லியன் பாட் (S$ 1.2 மில்லியன்) தொகையை எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவால் உலக விளையாட்டுப் போட்டிகள் பாதிப்பு

லண்டன்: கொரோனா கொள்ளைநோய் பாதிப்பு உலக அரங்கில் விளையாட்டுகளுக்கு வேட்டு வைத்திருக்கிறது.

ஏற்கெனவே, இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டிகளில் ஆறு தள்ளிப்போடப்பட்டுள்ள நிலையில், ரக்பி போட்டிகள் பலவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய வெற்றியாளர் கிண்ண ரக்பி போட்டியில் மோன்ட்பெல்லியே-லென்ஸ்டர் குழுக்களில் பலருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆட்டம் ஒத்திவைக்கப்படுள்ளது.

மொத்தத்தில், அமெரிக்கா, கனடா நாடுகளில் விடுமுறைக்கால ஆட்டங்கள் ரத்தாகியுள்ளன.