விழிப்புணர்வுக்கு வேண்டுகோள்
சிட்னி: கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிக்க நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்குமாறு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் திரு நிக் ஹோக்லி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருமித்தொற்று ஏற்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பு இருந்ததால் ஆஸ்திரேலியாவின் அணித் தலைவர் பேட் கமின்ஸ் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாம் ஆட்டம் தொடங்குவதற்கு முன் விலகிக்கொண்டார். அதைத் தொடர்ந்து ஹோக்லி இவ்வாறு எச்சரித்தார்.
தடையை மீறியதன் தொடர்பில் விசாரணை
மான்ட்ரியால்: நீச்சலிலிருந்து நான்கு ஆண்டுகளுக்குத் தடைசெய்யப்பட்டுள்ள சீனாவின் சன் யாங், தனது தடை உத்தரவை மீறினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்போவதாக 'வாடா' எனும் உலக ஊக்க மருந்து தவிர்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுகளில் மூன்று முறை தங்கம் வென்ற சன், அரசாங்க நிதியுதவியுடன் இயங்கும் வசதிகளில் பயிற்சி செய்துவந்ததாக பிரிட்டனின் 'தி டைம்ஸ்' நாளிதழ் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்படவுள்ளது.
மீண்டும் உயரும் மர்ரே
அபுதாபி: புதிய நம்பிக்கையுடன் மீண்டும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்கிறார் பிரிட்டனின் ஆண்டி மர்ரே. ஆண்கள் ஒற்றையர் டென்னிஸில் சில ஆண்டுகளுக்கு முன் முதலிடத்தை வகித்த மர்ரே, இப்போது 134வது இடத்தில் உள்ளார். எனினும், சரிவைச் சரிசெய்யும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் தலைநகரான அபுதாபியில் நடைபெற்ற நட்புமுறை போட்டியில் டேன் எவன்ஸ், நட்சத்திரம் ரஃபாயெல் நடால் ஆகியோரை வென்ற பிறகே ஓண்ட்ரே ருப்லெவிடம் தோல்வியடைந்தார் மர்ரே.

